லைஃப்ஸ்டைல்
எதிர்கால கல்வியில் செயற்கை நுண்ணறிவின் பயன்

எதிர்கால கல்வியில் செயற்கை நுண்ணறிவின் பயன்

Published On 2019-11-23 02:55 GMT   |   Update On 2019-11-23 02:55 GMT
அண்மைகாலமாக கல்வி மற்றும் பொழுதுபோக்கில் தொழில்நுட்பங்களின் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது.
இன்றைய நவீன தொழிற்நுட்பங்களால் நம்மை சுற்றி இருக்கும் ஒவ்வொரு பொருளும் ஏதோ ஒருவகையில் இன்னும் நம் வசதிக்கு தகுந்தாற்போல் மாறிக்கொண்டே வருகிறது. கணினிகள் இல்லாத அலுவலகங்களையே இப்போது பார்க்க முடிவதில்லை. ஆராய்ச்சிகளும் அதை தொடர்ந்து கண்டுபிடிக்கப்படும் தொழில்நுட்பங்களில் நம் வசதி மட்டும் அல்லாமல் நம் திறனும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்மைகாலமாக கல்வி மற்றும் பொழுதுபோக்கில் தொழில்நுட்பங்களின் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது.

இப்போது புதிதாக வந்துள்ள செயற்கை நுண்ணறிவு (செயற்கை நுண்ணறிவு என்பது மனிதனை போலவே யோசித்து கம்ப்யூட்டரில் செய்யக்கூடியது) என்னும் தொழில்நுட்பத்தால் மனிதனின் செயல்திறனை அதிகரிப்பது மட்டும் அல்லாமல் மனிதனால் குறைந்த அளவு சிந்தித்து செய்யக்கூடிய பல இடங்களில் சிறு சிறு வேலைகளில் மனிதனுக்கு மாற்றாக வேலை செய்ய பயன்படுகிறது. 1943-ல் வாரன் மெச்சுல்லாச் மற்றும் வால்டேர் பிட்ஸ் உருவாக்கிய கட்டமைப்பே முதலாவது செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பு என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் மனித மூளையில் இருக்கும் நியுரான்களை (மூளையின் செல்கள்) அடிப்படையாக வைத்து இந்தசெயற்கை நுண்ணறிவு கட்டமைப்பை உருவாக்கினர்.

செயற்கை நுண்ணறிவு என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும், அதனுள் மூன்று பிரிவுகள் உள்ளன. “துணைபுரியும் நுண்ணறிவு” இது மிக எளிதான தானியங்கி. தொழிற்சாலைகளில், ஐடி துறைகளில் மற்றும் பணியிடங்களில் மனிதர்களை ஈடுபடுத்தும் ஒரே விதமான செயல்களை எந்திரங்களைக் கொண்டு செய்யலாம். அடுத்து மனிதர்கள் சொல்லும் கட்டளைகளை ஏற்று செயல்படும் நுண்ணறிவு. இது மனிதர்கள் சொல்லி செய்யும் மற்றும் மனிதர்களின் செயல்பாடுகளில் இருந்து கற்பது போன்றவற்றின் மூலம் ஒரு முடிவை எடுக்கும் திறன் கொண்டது.

இறுதியாக ஆட்டோமேட்டிக் நிகர்நிலை நுண்ணறிவு. இதில் மனிதர்களின் செயல்பாடு தேவையில்லை;ஆட்டோமேடிக் கார் மற்றும் எந்திர மனிதன் இதற்கான உதாரணங்கள்.கடந்த ஐந்து ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு உள்ள சாதனங்கள் உலகில் பெருமளவு அதிகரித்துள்ளது. தேடுதல் பொறியான கூகுல் நிறுவனத்தில் அநேகமாக எல்லா வகையான தொழில்நுட்பங்களிலும் செயற்கை நுண்ணறிவு ஏற்கனவே வந்துவிட்டது. இந்தியாவை தலைமை இடமாக கொண்ட பல நிறுவனங்களில் உலகத் தரத்திற்கு ஏற்றாற்போல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை நம் இந்தியர்களே உருவாக்கி வருகின்றனர். கல்வியில் கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவின் மூலம் முன் எப்பொழுதும் இல்லாத வளர்ச்சியை காணலாம். வங்கிகள் மற்றும் அரசு தேர்வுகள் பெரும்பாலானவை ஆன்லைனிலேயே தேர்வு எழுதும் முறைக்கு மாறிவிட்டதால் தேர்வு முடிவுகள் உடனடியாகவும் கிடைக்கிறது.

சமீபத்தில் இ-ஸ்கூல் நடந்திய ஆய்வில் வரும் 2021-க்குள் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு மொத்த கல்வியில் 47.5சதவீதம் ஆக அதிகரித்துவிடும் என சொல்கிறார்கள். அதிகரித்து வரும் ஆன் லைன் பாடத்திட்டத்தினால் குறைந்த நேரத்திலேயே அதிக பாடங்களை மனது ஊன்றி படிக்க வழிவகுக்கிறது. ஒவ்வொரு மனிதனின் விருப்பு வெறுப்புகளை புரிந்துக்கொண்டு அவர்களுக்கு ஏற்றாற்போல பாடத்தை மாற்றி அமைக்கவும் செயற்கை நுண்ணறிவு வளர்ந்து வருவது வரவேற்க தகுந்தது. வகுப்பறைகள் இணைய வசதிகளால் ஸ்மாட் வகுப்பறைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. கணினி விளையாட்டுகள் மூலம் கற்கும் முறைகளில் ஆரம்பித்து கணினி வழிக்காட்டுதலாலேயே கற்கும் அளவிற்கு செயற்கை நுண்ணறிவு வலுப்பெற்று வருகிறது.

ஆசிரியர்கள் வகுப்பறையில் நடத்திவிட்டு வீட்டுப்பாடம் கொடுக்கும் முறை மெல்ல மாறி வீட்டிலேயே வகுப்புக்கு வேண்டிய ஆசிரியரின் வீடியோவை பார்த்துவிட்டு மனதில் தோன்றும் சந்தேகங்களை பற்றி ஆசிரியரிடம் வகுப்பறையில் கலந்துரையாடும் முறை உலக அளவில் வளர்ந்து கொண்டு வருகிறது. இதன் பெயர் பிலிப் வகுப்பறை முறையாகும். ஏற்கனவே இந்திய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இம்முறை வெகுவாக பரவி வருகிறது.

முன்பெல்லாம் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் நூலகத்தைநாடும் நிலை இருந்தது. இப்போது கைபேசியிலேயே அனைத்துக்கும் தீர்வு கிடைத்துவிடும். ஆசிரியர்கள் தன் திறனை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவும், பாடம் சார்ந்த அனைத்தையும் உலகத்தரத்தில் போதிக்கவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம்.

தொழில்நுட்ப கல்விமுறையில் மட்டும் அல்லாமல் மருத்துவக்கல்வி, உயிரியக்கல்வி, மேலாண்மை கல்வி, கலை மற்றும் அறிவியல் கல்வி முறைகளிலும் இனிவரும் காலங்களில் பாடத்திட்டத்தை உருவாக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பங்கு இன்றியமையாதது. (யார் துணையும் இல்லாமல் பாடங்களை சுயமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியால் கற்றுக்கொள்ள வழிவகை செய்கிறது.)

சீனா, சிங்கப்பூர் போன்ற மத்திய மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் கல்வியில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு உச்சத்தை தொட்டுள்ளது. உதாரணமாக சீனாவில் சில பள்ளிகளில் வகுப்பறையில் மாணவர்கள் நாட்டம் எவ்வளவு உள்ளது என்பதை கண்டறிய செயற்கை நுண்ணறிவு நுட்பம் வாய்ந்த கேமராக்கள் மற்றும் மாணவர்களின் மூளையின் செயல்பாடுகளை உடனுக்குடன் ஆசிரியரின் கணினியில் பார்த்து அறிந்து கொள்ளவும் பயன்படுகிறது. பாடத்தில் கவனம் செலுத்தாத மாணவனுக்கு சிறப்பு பயிற்சிகளை கொடுக்க பரிந்துரை செய்யும் அளவிற்கு செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது.

இனிவரும் காலங்களில் சாட் போட் என அழைக்கப்படும் தொழில்நுட்ப உதவியால் நமக்கு தோன்றும் சந்தேகங்களுக்கு மனிதர்களை தொந்தரவு செய்யாமல் சாட் போட்டிடமே உரையாடி கொண்டு தெளிவை பெறலாம். தற்போது எதிர்காலத்தில் இந்தியாவில் தனியார் நிறுவனங்களின் வலைதளத்தில் மட்டுமல்லாமல் அரசின் நிறுவனங்களிலும் மக்களுக்கு வேண்டிய தகவல்களை கொடுக்க சாட் போட் பயன்படுத்த வாய்ப்புள்ளது. அரசு துறைகளில் கொடுக்கப்படும் சேவைகளின் திறனை அதிகரிக்கவும் மக்களுக்கு வேண்டிய தகவல்களை உடனுக்குடன் தெரியப்படுத்தவும் செயற்கை நுண்ணறிவின் தேவை அதிகரித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு என்பது மகிழ்ச்சி, துயரம், ஏக்கம், வியப்பு, காதல், கருணை, அச்சம், கோபம், வீரம் போன்ற உணர்வுகளற்ற, வலி போன்ற உணர்ச்சிகளற்ற ஒரு “ஜடம்”. என்ன தான் தன்னுணர்வோடு முடிவுகள் எடுத்தாலும், சுயேச்சையாய் சிந்திக்கத் தெரிந்திருந்தாலும், இறுதியில் “அது” வெறும் எந்திரம் தான். மனிதனின் செயல்திறனை அதிகமாக்கவே கணினி கண்டுபிடிக்கப்பட்டது. இணையம், கணினிகள், செல்போன் போன்ற மின்னணு பொருட்களால் நம் உலக அறிவை விருத்தி செய்ய முடிகிறது என்பது வரவேற்கத்தக்கது என்றாலும் வரும் காலங்களில் நாம் எதிர்நோக்க இருக்கும் திறமை குறைப்பாட்டை போக்க அனைவரும் அறிவியல் வளர்ச்சியில் உச்சமான செயற்கை நுண்ணறிவை பற்றி அறிந்து கொண்டு நமக்கு தேவையான வேலைகளின் திறனை அதிகரிக்க பயன்படுத்தி கொள்ளலாம்.

இரா. ராஜ்குமார், துணை பேராசிரியர்,

கணினி பொறியியல் துறை,

தனியார் பல்கலைக்கழகம். சென்னை.
Tags:    

Similar News