ஆன்மிகம்
திருவிழாவையொட்டி பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து ஊர்வலமாக சென்ற போது எடுத்த படம்.

ஈரோடு பொிய எல்லை மாரியம்மன் கோவில் திருவிழா

Published On 2021-03-13 06:26 GMT   |   Update On 2021-03-13 06:26 GMT
ஈரோடு வளையக்கார வீதி பெரிய எல்லை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
ஈரோடு வளையக்கார வீதியில் பிரசித்தி பெற்ற பெரிய எல்லை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 2-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அன்று இரவு 7 மணிக்கு கோவிலில் பூச்சாட்டப்பட்டது.

நேற்று முன்தினம் கபால பூஜை நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணிக்கு பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுப்பதற்காக காரைவாய்க்கால் பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்காலுக்கு சென்றனர். பின்னர் பக்தர்கள் புனிதநீராடி விட்டு தீர்த்தக்குடம், பால்குடம், அக்னி சட்டி எடுத்து, ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு பெரிய மாரியம்மனை தரிசனம் செய்து விட்டு, அங்கிருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர்.

இதைத்தொடர்ந்து பெரிய எல்லை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு பெண்கள் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வருகிறார்கள். பின்னர் இரவு 7 மணிக்கு ஊஞ்சலாட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) கோவில் முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைக்கிறார்கள். அதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு சிங்க வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.
Tags:    

Similar News