செய்திகள்
உடல்கள் தோண்டி எடுக்கப்படுவதையும், இறந்தவர்களையும் படத்தில் காணலாம்.

சொத்திற்காக 6 பேரை சயனைடு கொடுத்து கொலை செய்த பெண் கைது

Published On 2019-10-05 06:28 GMT   |   Update On 2019-10-05 06:28 GMT
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சொத்தை அபகரிக்க ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை சயனைடு கொடுத்து கொலை செய்த பெண்ணை போலீசார் 14 ஆண்டுகளுக்கு பின் கைது செய்தனர்.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரைசேரி அருகே உள்ள கூடத்தொரை பகுதியை சேர்ந்தவர் ஜான் தாமஸ். ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி. இவரது மனைவி அன்னம்மாள். ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்களது மகன் ரோய் தாமஸ். அன்னம்மாளுடன் அவரது சகோதரர் மேத்யூ. மற்றும் ஜான் தாமசின் சகோதரரின் மருமகள் பீலி. இவரது 1 வயது மகன் அல்பன் ஆகியோர் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை இவர்கள் 6 பேரும் ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் இறந்தனர். இதில் அனைவரது சாவும் ஒரே மாதிரியாக இருந்தது.

அவர்களது உடல்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்களின் மரணம் சாதாரணமானது என கூறினர். இதையடுத்து அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.

இந்த நிலையில் அவர்கள் 6 பேர் சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் போலீசாரிடம் கூறி வந்தனர். ஆனால் அதனை போலீசார் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து விசாரிக்காமல் விட்டு விட்டனர்.

தொடர்ந்து அவரது உறவினர்கள், 6 பேர் சாவில் மர்மம் இருப்பதால் விசாரணை நடத்த வேண்டும் என கோழிக்கோடு போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர்.

உறவினர்களின் தொடர் வலியுறுத்தலால் போலீசார் அவர்களது உடல்களை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். அதன்படி போலீசார் 14 வருடங்களுக்கு பின் அவர்களது உடல்கள் புதைக்கப்பட்ட கல்லறை தோட்டத்திற்கு சென்று 6 பேரின் உடல்களை தோண்டி எடுத்தனர்.

பின்னர் அவற்றில் இருந்த எலும்பு கூடுகள், உடல் பாகங்கள் ஆகியவற்றை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவில் அவர்களது உடல்களில் வி‌ஷம் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஜான் தாமஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்களை அபகரிப்பதற்காக அவர்களது உறவினரான ஜோலி என்ற பெண் அவர்கள் அனைவருக்கும் ஆட்டுக்கால் சூப்பில் சயனைடு கலந்து கொடுத்துள்ளார். அதனை குடித்த பின்பே அவர்கள் அனைவரும் வாந்தி, மயக்கம், வயிற்று போக்கு ஏற்பட்டு இறந்துள்ளனர் என்றனர்.

இதையடுத்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் ஜோலியை போலீசார் இன்று கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News