ஆன்மிகம்
துர்க்கை அம்மன், வலம்புரி அம்மன், திரிபுரசுந்தரி அம்மன் ஆகிய அம்மன்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

தசரா திருவிழா: 44 அம்மன் கோவில் சப்பர பவனி

Published On 2019-10-09 03:56 GMT   |   Update On 2019-10-09 03:56 GMT
தசரா திருவிழாவையொட்டி நெல்லை-பாளையங்கோட்டையில் 44 அம்மன் கோவில்களின் சப்பர பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன், தூத்துவாரி அம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், யாதவ உச்சிமாகாளி, விசுவகர்ம உச்சிமகாளி, வடக்கு உச்சிமாகாளி, முப்புடாரி அம்மன், கிழக்கு உச்சிமாகாளி அம்மன், புதுப்பேட்டை தெரு உலகம்மன் கோவில், புது உலகம்மன்கோவில், பேராச்சி அம்மன் ஆகிய கோவில்களிலும் தசரா திருவிழாவையொட்டி நேற்று காலையில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், துர்கா பூஜையும் நடந்தது.

மாலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. இரவு 10 மணிக்கு அம்மன்களுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், இரவு 12 மணிக்கு அம்மன்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதை தொடர்ந்து 12 அம்மன் கோவில்களிலும் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் அம்மன் எழுந்தருளி அந்தந்த வீதிகளில் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

இன்று(புதன்கிழமை)காலை 9 மணிக்கு அனைத்து சப்பரங்களும் பாளையங்கோட்டை ராமசுவாமி கோவில் திடலிலும், பகல் 1 மணிக்கு ராஜகோபால சுவாமி கோவில் முன்பும், மாலை 6 மணிக்கு பாளையங்கோட்டை மார்க்கெட் திடலிலும் அணி வகுத்து நிற்கும். இதைதொடர்ந்து அனைத்து சப்பரங்களும் நள்ளிரவு 1 மணிக்கு பாளையங்கோட்டை போலீஸ் கண்ட்ரோல் ரூம் அருகே உள்ள மாரியம்மன் கோவில் மைதானத்தில் அணிவகுத்து நிற்கும். அப்போது சூரசம்ஹாரம் நடக்கும்.

நெல்லை டவுனில் உள்ள பிட்டாபுரத்தி அம்மன், துர்க்கையம்மன், சாலியர் தெரு மாரியம்மன், நல்லமுத்தம்மன், முப்பிடாதி அம்மன், உச்சிமாகாளி அம்மன், தடிவீரன் கோவில் தெரு மாரியம்மன், திருப்பணிமுக்கு மாரியம்மன், தங்கம்மன், காந்தாரி அம்மன், பூமாதேவி அம்மன், ஆயுள்பிராட்டி அம்மன், ராஜராஜேசுவரிஅம்மன், திரிபுரசுந்தரி அம்மன், வாகையடி அம்மன், முத்தாரம்மன், சுந்தராட்சி அம்மன், அறம்வளர்த்தநாயகி அம்மன், பூமாதேவி அம்மன் உள்ளிட்ட 32 அம்மன் கோவில்களிலும் நேற்று தசரா விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், துர்கா பூஜையும் நடந்தது.

மாலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. இரவு 10 மணிக்கு அம்மன்களுக்கும் சிறப்பு அலங்கார தீபாராதனையும், இரவு 11 மணிக்கு சிறப்பு பூஜையும் நடந்தது. இதை தொடர்ந்து அனைத்து கோவில்களிலும் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் அம்மன் எழுந்தருளி அந்தந்த வீதிகளில் வீதி உலா நடந்தது. நள்ளிரவில் அனைத்து சப்பரங்களும் நெல்லையப்பர் கோவில் முன்பு வந்து நின்றன. அப்போது சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News