உள்ளூர் செய்திகள்
எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ.,

விசைத்தறி கூலி உயர்வு பிரச்சினைக்கு உடனடி தீர்வு - எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

Published On 2022-01-11 08:09 GMT   |   Update On 2022-01-11 08:09 GMT
அ.தி.மு.க. அரசு விசைத்தறி தொழிலுக்கு தனி டேரிப் அமைத்துக் கொடுத்தும் மின் கட்டண சலுகைகள் வழங்கியும் விசைத்தறி தொழிலை காப்பாற்றி வந்தது.
பல்லடம்:

பல்லடம் விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு கோரிக்கைக்கு உடனடி தீர்வு காண எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்லடம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன .

பல்லடம் தொகுதி மக்களின் பிரதான தொழில் விசைத்தறி தொழில் ஆகும். இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் விசைத்தறி தொழில் நலிவடைந்த போது அப்போதைய அ.தி.மு.க. அரசு விசைத்தறி தொழிலுக்கு தனி டேரிப் அமைத்துக் கொடுத்தும் மின் கட்டண சலுகைகள் வழங்கியும் விசைத்தறி தொழிலை காப்பாற்றி வந்தது .

விசைத்தறி கூலி உயர்வு கோரி அவர்கள் போராடிய காலகட்டங்களில் அ.தி.மு.க. அரசு ஜவுளி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூலி உயர்வு பெற்றுத்தந்துள்ளது. 

கடந்த 2014-ம் ஆண்டு நான் அமைச்சராக இருந்தபோது கூலி உயர்வுக்காக கோவையில் ஜவுளி உற்பத்தியாகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அப்போதைய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் எனது முன்னிலையில் கூலி உயர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

இந்தநிலையில் தற்போது உதிரிபாகங்கள் விலை உயர்வு, தொழிலாளர்கள் சம்பளம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு என பல வகையிலும் விலைவாசி உயர்ந்துள்ளதால் விசைத்தறி தொழில் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. 

கடந்த ஆண்டு நவம்பர் 24-ந்தேதி அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்கள், தொழிலாளர் நல துறையினர் முன்னிலையில் விசைத்தறியாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் டிசம்பர் 1-ந் தேதி முதல் கூலி உயர்வு வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் கூலி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர் .

எனவே விசைத்தறி ஜவுளி தொழில் நடைபெறுவதைத் தவிர்க்கவும், லட்சக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கவும் தமிழக அரசு உடனடியாக கூலி உயர்வை அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடனடி தீர்வு கண்டு தொழிலாளர்களின் நலன் காத்து விசைத்தறி தொழிலாளர்கள் தைப்பொங்கல் சிறப்பாக கொண்டாட வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News