செய்திகள்
மிரட்டல்

கோவையில் உள்ள வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவன்

Published On 2019-09-07 04:27 GMT   |   Update On 2019-09-07 04:27 GMT
கோவையில் உள்ள வணிக வளாகத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவனை பெற்றோருடன் நேரில் ஆஜராகுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவை:

கோவை டாடாபாத்தில் மோகன்தாஸ் என்பவருக்கு சொந்தமான வணிகவளாகம் உள்ளது. நேற்று இரவு 10.30 மணிக்கு மோகன்தாசின் செல்போனுக்கு அழைப்பு வந்தது.

அதில் பேசிய நபர் உங்களுக்கு சொந்தமான இடத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், இன்னும் சற்று நேரத்தில் அது வெடிக்க இருப்பதாகவும் மிரட்டல் விடுத்தார். இதில் அதிர்ச்சியடைந்த மோகன்தாஸ் இது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வணிக வளாகத்துக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். வெடிகுண்டி பீதியால் அந்த பகுதியில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.

வெடிகுண்டு நிபுணர்கள் 2 மணி நேரம் சோதனை நடத்தினர். ஆனால் எந்த வெடிகுண்டும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து போலீசார் வணிக வளாக உரிமையாளர் மோகன்தாஸ் செல்போனுக்கு மிரட்டல் விடுத்து வந்த எண்ணை ஆய்வு செய்த போது தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இருந்து அழைப்பு வந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மிரட்டல் வந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினர்.

அப்போது ஆண்டிபட்டியை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவன் தனது நண்பர்களிடம் விளையாட்டாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்க எண்ணி டயல் செய்த போது தவறுதலாக கோவை வணிகவளாக உரிமையாளருக்கு அழைப்பு வந்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் 13 வயது மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இன்று காலை கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் மாணவனை அழைத்துக்கொண்டு ஆஜராகும்படி அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News