செய்திகள்
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்

தடுப்பூசி வேண்டாம்... தனி 'ஸ்டைலில்' கொரோனாவை எதிர்கொள்ள வடகொரிய அதிபர் கிம் உத்தரவு

Published On 2021-09-04 07:43 GMT   |   Update On 2021-09-04 08:21 GMT
கொரோனா தொற்று உலகளவில் பரவத் தொடங்கியது முதலே வடகொரியா, பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை அறிவித்தது.
வடகொரியா:

உலகின் பல நாடுகளில் இன்னும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் முழுவதாக நீங்கவில்லை. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை முடிவுக்கு வரவில்லை.

இப்படி பல்வேறு நாடுகள் கொரோனா தொற்றுப் பரவலை சமாளிக்க நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் திட்டம் மூலம் வடகொரியாவுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.



அப்படி அனுப்பும் தடுப்பூசிகள் வேண்டாம் என்று தன் நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டுள்ளார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்.  மேலும் அவர், 'பெருந்தொற்றை சமாளிக்க நம் ஸ்டைலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொற்றுப் பரவலை சமாளிக்க போடப்படும் கட்டுப்பாடுகள் ஒரு கணம் கூட மீறப்படக் கூடாது' என்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உலகளவில் பரவத் தொடங்கியது முதலே வடகொரியா, பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை அறிவித்தது. கொரோனா பரவலால் வடகொரியாவின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஆயினும் தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு எதிராக நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார் கிம். தங்கள் நாட்டில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று வடகொரியா தொடர்ந்து சொல்லி வருகிறது. ஆனால், அதை வல்லுநர்கள் ஏற்க மறுக்கின்றனர்.

Tags:    

Similar News