செய்திகள்
சபரிமலையில் காத்திருக்கும் பக்தர்கள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு வாடகை புல்லட் - தெற்கு ரெயில்வே ஏற்பாடு

Published On 2019-12-02 10:00 GMT   |   Update On 2019-12-02 10:00 GMT
கேரளா வரும் ஐயப்ப பக்தர்கள் பம்பைக்கு சிரமமின்றி சென்று வர மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு விடும் திட்டத்தை தெற்கு ரெயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாக்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பார்கள்.

நாடு முழுவதிலும் இருந்து சபரிமலைக்கு வரும் பக்தர்களால் பஸ், ரெயில்களில் கூட்டம் அலைமோதும். வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் பெரும்பாலும், திருவனந்தபுரம் மற்றும் செங்கனூர் ரெயில் நிலையங்களில் இறங்கி பந்தளம், பம்பை செல்வார்கள்.



இதற்காக செங்கனூரில் இருந்து பம்பை செல்லும் பஸ்களில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்களால் பம்பைச் சென்று, சபரிமலை  சன்னிதானத்தை அடைய முடியாத நிலை ஏற்படுகிறது.

கேரளாவுக்கு ரெயில்களில் வரும் பக்தர்கள் சிரமமின்றி பம்பை சென்றடைய தெற்கு ரெயில்வே பல்வேறு மாற்று வழிகள் குறித்து ஆலோசித்தது. இதில் பம்பைக்கு அருகில் இருக்கும் செங்கனூர் ரெயில் நிலையத்தில் இருந்து பக்தர்களுக்காக இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விட திட்டமிட்டது.

இதற்காக கொச்சியைச் சேர்ந்த கபே ரைடர்ஸ் என்ற நிறுவனத்தை தெற்கு ரெயில்வே நிர்வாகம் அணுகியது. கபே ரைடர்ஸ் நிறுவனத்தினர்  கொச்சியில் மோட்டார் சைக்கிள்களை வாடிக்கையாளர்களுக்கு வாடகைக்கு விட்டு வருகிறார்கள். இவர்களிடம் செங்கனூர் ரெயில் நிலையத்தில் இருந்து பம்பை வரை செல்ல ஐயப்ப பக்தர்களுக்கு புல்லட் மோட்டார் சைக்கிள்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வேயின் வர்த்தக பிரிவு மேலாளர் பாலமுரளி கூறியதாவது:-

கேரளா வரும் ஐயப்ப பக்தர்கள் பம்பைக்கு சிரமமின்றி சென்று வர மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு விடும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். இதற்காக ராயல் என்பீல்ட் நிறுவனத்துடன் பேசி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிறுவனத்தின் மூலம் கொச்சியைச் சேர்ந்த கபே ரைடர்ஸ், புல்லட் மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு விடுகிறார்கள். விரைவில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, திருச்சூர் ரெயில் நிலையங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

செங்கனூர் ரெயில் நிலையத்தில் இருந்து பம்பைச் செல்ல புல்லட் மோட்டார் சைக்கிளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நேரத்தை தாண்டும் பட்சத்தில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.100 வீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே இத்திட்டத்தில் புல்லட் மோட்டார் சைக்கிள்களை போல ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களையும் விரைவில் வாடகைக்கு விட இருப்பதாக இந்த நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News