ஆன்மிகம்
திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலில் வடக்கு வாசல் திறக்கப்பட்ட போது எடுத்தபடம்.

5 ஆண்டுகளுக்கு பிறகு திருவெள்ளறை பெருமாள் கோவிலில் வடக்கு வாசல் திறப்பு

Published On 2021-02-19 04:54 GMT   |   Update On 2021-02-19 04:54 GMT
திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலின் வடக்கு வாசல் 5 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை புண்டரீகாட்சபெருமாள் கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலாகும். இந்தகோவிலை புதுப்பித்து கட்டும் பணி கடந்த பல ஆண்டுகளாக நடந்துவந்தது. இதனால் கோவிலின் வடக்குவாசல் அடைக்கப்பட்டது.

இதன் காரணமாக பக்தர்கள் கிழக்குவாசல் வழியாக கோவிலுக்குள் சென்று பெருமாள்-தாயாரை வணங்கி சென்றார்கள். இது பக்தர்களுக்கு பெரிதும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. எனவே, ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி வடக்கு வாசல் வழியாக பக்தர்களை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில் அங்கு திருப்பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று வடக்கு வாசல் திறக்கப்பட்டது. முன்னதாக யாகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பதினெட்டாம்படி கருப்புக்கு பூஜைகள் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து பக்தர்கள் வடக்குவாசல் வழியாக கோவிலுக்குள் சென்று பெருமாள் மற்றும் தாயாரை வழிபட்டு சென்றனர். 5 ஆண்டுகளுக்கு பிறகு வடக்குவாசல் வழியாக கோவிலுக்குள் சென்றது பக்தர்களை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் மாரிமுத்து, ரெங்கநாதர் கோவிலின் அறங்காவலர் ரெங்காச்சாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News