செய்திகள்
கமல்ஹாசன்

பிரசாந்த் கிஷோர் ஆலோசனையை தீவிரமாக செயல்படுத்தும் கமல்

Published On 2019-08-27 08:56 GMT   |   Update On 2019-08-27 08:56 GMT
பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைப்படி மக்கள் நீதி மய்யம் கட்சியில் பல மாற்றங்கள் நடந்து வருகின்றன. இதுவரை 5 முறை கமல்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.
சென்னை:

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அவரது கட்சி போட்டியிட்டது. இந்த தேர்தலில் அவர் சுமார் 4 சதவீத வாக்குகளை பெற்றார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி பெற்ற வாக்கு சதவீதம் குறைவாக இருந்தாலும் கூட சில தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் அளவுக்கு வாக்குகள் கிடைத்தன. 4 தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் கிடைத்தன. 11 தொகுதிகளில் அக்கட்சி 3-வது இடம் பெற்றது. இது கமல்ஹாசனுக்கும் அவரது கட்சியினருக்கும் உற்சாகத்தை அளித்தது.

அடுத்த கட்டமாக சட்டமன்ற தேர்தலை நோக்கி அவர் அரசியல் வியூகம் அமைத்து வருகிறார். முக்கியமாக மக்கள் நீதி மய்யத்துக்கு நகர்ப்புறங்களில் இருக்கும் அளவுக்கு கிராமப்புறங்களில் ஆதரவு இல்லை. இதனால் கட்சிக்கு சரியான நிர்வாகிகளை தமிழகம் முழுக்க நியமிக்கவும் தொடர்ந்து கிராமப்புறங்களில் கவனம் செலுத்தவும் கமல் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் வெற்றிக்காக அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் கைகோர்த்துள்ளார்.



பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைப்படி கட்சியில் பல மாற்றங்கள் நடந்துவருகின்றன. இதுவரை 5 முறை கமல்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகி ஒருவர் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:

பிரசாந்த் கிஷோர் குழுவினர் என்னென்ன ஆய்வு நடத்துகிறார்கள், எங்களுக்காக என்னென்ன பணியாற்றுகிறார்கள் என்பது எங்களுக்கே தெரியாது. அந்த அளவு யாரும் யூகிக்க முடியாத வகையில், பிக்பாஸ், சினிமா பணிகளுக்கு இடையேயும் கமல் கட்சியை வலுப்படுத்தி வருகிறார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பது தான் எங்கள் நோக்கம். உடனடியாக ஆட்சியை பிடிக்காவிட்டாலும் எங்கள் கட்சிக்கு என்று கணிசமான எம்.எல்.ஏ.க்களையாவது பெறுவோம்’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News