செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் இன்று மாலை ‘குலாப்’ புயல் உருவாகிறது - துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு

Published On 2021-09-25 06:13 GMT   |   Update On 2021-09-25 07:21 GMT
நாகை, காரைக்கால், பாம்பன் துறைமுகங்களில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எண்ணூர் துறைமுகத்திலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை:

மத்திய வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த பகுதி தீவிர காற்றழுத்த பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

மேலும் இது தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது புயல் சின்னமாக மாற வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

மத்திய வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த மண்டலமாகி மாறியுள்ளது.

இன்று காலை 5.30 மணி நிலவரப்படி ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு கிழக்கு தென்கிழக்குக்கு 510 கிலோ மீட்டர் தொலைவிலும், கலிங்கப்பட்டினத்தில் இருந்து கிழக்கு, வடகிழக்குக்கு 590 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த புயல் மையம் கொண்டுள்ளது.



இந்த புயலுக்கு “குலாப்” என்று பெயர் சூட்டப்பட் டுள்ளது. இது தீவிர புயலாக அடுத்த 12 மணி நேரத்தில் அதாவது இன்று மாலை அல்லது இரவுக்குள் தீவிர புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் நாளை மாலை (26-ந்தேதி) விசாகப்பட்டினம்-கோபால்பூருக்கும் இடையே வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா பகுதியில் கரையை கடக்க வாய்ப்புள்ளது.

இதனால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் ஒரு சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்த புயலையொட்டி நாகை, காரைக்கால், பாம்பன் துறைமுகங்களில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எண்ணூர் துறைமுகத்திலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கடல் காற்று பலமாக வீசக்கூடும் என்பதால் குமரி கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் தேவகோட்டை 14 சென்டி மீட்டர், மதுரை தெற்கு, சேரன்மாதேவி தலா-11, மதுரை விமான நிலையம், முசிறி தலா-10, குளித்தலை-8, மதுரை திருமங்கலம்-7, வத்தலை அணைக்கட்டு, குன்னூர், வேடச்சந்தூர், சத்தியமங்கலம், வாடிப்பட்டி, கரூர், அவலாஞ்சி தலா-6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.


Tags:    

Similar News