செய்திகள்
விடுதலை

உலகிற்கே ஆபத்தான 400 பயங்கரவாதிகளை விடுதலை செய்யும் பணியை தொடங்கிய ஆப்கானிஸ்தான்

Published On 2020-09-02 17:21 GMT   |   Update On 2020-09-02 17:21 GMT
உலகிற்கே ஆபத்தானவர்கள் என அறிவிக்கப்பட்ட 400 தலிபான் பயங்கரவாதிகளையும் விடுதலை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காபூல்:

ஆப்கானிஸ்தானில் 2001 முதல் நடைபெற்று வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர,அந்நாட்டு அரசின் உதவியோடு கடந்த பிப்ரவரியில் தலிபான் தீவிரவாதிகளுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் பிராந்தியங்களில் இருந்து தனது படைகளை திரும்பப்பெற அமெரிக்க ஒப்புக்கொண்டது.ஆனால், ஆப்கானிஸ்தான் சிறையில் உள்ள 5 ஆயிரம் பயங்கரவாதிகளை விடுதலை செய்யவேண்டும் என தலிபான்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டால்தான் ஆப்கானிஸ்தான் அரசுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த முன்வருவோம் எனவும் தங்கள் பிடியில் உள்ள 1,000 பேரை விடுவிப்போம் எனவும் தலிபான் பயங்கரவாதிகள் கெடு விதித்தனர்.

இதையடுத்து, ஆப்கானிஸ்ஸ்தான் சிறையில் பலகட்டங்களாக 4,600 தலிபான் பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டனர். தலிபான்கள் பிடியில் இருந்த ஆப்கானிஸ்தான் வீரர்கள் பலரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் இந்த் ஒப்பந்தத்தின் பேரில் எஞ்சிய 400 பயங்கரவாதிகளை விடுதலை செய்ய ஆப்கானிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்து வந்தது. இந்த பயங்கரவாதிகள் விடுதலைக்கு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் வீடியோ அழைப்பின் மூலம் பேசிய அஷ்ரப்,இந்த பயங்கரவாதிகள் நமக்கு மட்டுமல்ல இந்த உலகத்திற்கே ஆபத்தானவர்கள் என எச்சரிக்கை விடுத்தார்.மேலும், சிறையில் உள்ள எஞ்சிய 400 பேரும் மிகவும் ஆபத்தானவர்கள். இவர்களில் 150 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்படுவதற்காக காத்திருந்தவர்கள்.

44 பேர் அமெரிக்காவின் ஆபத்தானவர்கள் பட்டியலில் உள்ளவர்கள். இந்த பயங்கரவாதிகளில் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டினரை கொன்றவர்களும் உள்ளனர்.இதனால் இந்த பயங்கரவாதிகளின் விடுதலைக்கு அந்த நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த 400 பயங்கரவாதிகளையும் விடுதலை செய்ய ஆப்கானிஸ்தானின் முக்கிய தலைவர்கள் அனுமதியளித்தனர். ஆனால் பயங்கரவாதிகளை விடுதலை செய்வதில் கால தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், பயங்கரவாதிகளில் சுமார் 200 பேரை ஆப்கானிஸ்தான் அரசு கடந்த திங்கள் கிழமை விடுதலை செய்துள்ளது.

பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டதையடுத்து பதிலுக்கு தலிபான்கள் பிடியில் இருந்த ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையின் கமாண்டர்கள் 4 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.எஞ்சிய பயங்கரவாதிகளும் கூடிய விரைவில் விடுதலை செய்யப்பட்டு அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் என ஆப்கானிஸ்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News