செய்திகள்
ராமதாஸ்

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை சிறப்பு ஆள்தேர்வு மூலம் நிரப்ப வேண்டும்- ராமதாஸ்

Published On 2021-10-08 07:40 GMT   |   Update On 2021-10-08 07:40 GMT
இந்திய அரசியல் சட்டம் உள்ளிட்ட எந்த சட்டத்திலும் இல்லாமல் திணிக்கப்பட்ட கிரீமிலேயர் முறைக்கு முடிவு கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மத்திய அரசுத்துறை பணிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பிரதிநிதித்துவம் குறித்து மத்திய அரசு தெரிவித்துள்ள புள்ளிவிவரங்கள் பேரதிர்ச்சியளிக்கின்றன. மத்திய அரசுப் பணியாளர்களில் வெறும் 17.50 விழுக்காட்டினர் மட்டுமே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பது தான் பேரதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் ஆகும். இது இந்தியாவில் சமூக நீதி தழைப்பதற்கு எந்த வகையிலும் உதவாது.

பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசில் ஒட்டு மொத்தமாக 53 துறைகள் உள்ள நிலையில், 19 அமைச்சகங்களில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் பிரதிநிதித்துவத்தை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அத்துறைகளில் பட்டியலினத்தவருக்கு 15.34 சதவீதம், பழங்குடியினருக்கு 6.18சதவீதம், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 17.50 சதவீத பிரதிநிதித்துவம் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பிரதிநிதித்துவம் என்பது பொதுப்போட்டிப் பிரிவில் வெற்றி பெற்று, மத்திய அரசுப் பணிகளில் சேர்ந்த இட ஒதுக்கீட்டுப் பிரிவினரையும் உள்ளடக்கியது ஆகும். அதன்படி எந்த இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காதது உறுதியாகிறது.

மத்திய அரசு வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு 1990ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை முறியடித்து 1992-93-ம் ஆண்டில் தான் நடைமுறைக்கு வந்தது. சுமார் 30 ஆண்டுகளாக ஓபிசி இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்தும், அவர்களுக்கு வழங்கப்பட்ட 27 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசால் இன்னும் முழுமையாக நனவாக்க முடியவில்லை. மத்திய அரசின் 19 அமைச்சகங்களில் 17.50 சதவீத பணியாளர்கள் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று கூறுவது கூட, பொதுப்போட்டிப் பிரிவில் வெற்றி பெற்றவர்களையும் சேர்த்து தான். பொதுப்போட்டிக்கான 50.50 சதவீத இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 7.5சதவீத இடங்களை கைப்பற்றியதாக கணக்கில் கொண்டாலும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத ஒதுக்கீட்டில் 10 விழுக்காட்டுக்கும் குறைவானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது மிகப்பெரிய சமூக அநீதி.

மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் உள்ள பணியாளர்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் எவ்வளவு? அவர்களுக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாதது ஏன்? என்பது குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்காக, கடந்த காலங்களில் அவர்களுக்கு மறுக்கப்பட்ட பணியிடங்களை பின்னடைவு பணியிடங்களாக அறிவித்து, சிறப்பு ஆள்தேர்வு மூலம் அவற்றை ஓ.பி.சி. வகுப்பினரைக் கொண்டு நிரப்ப வேண்டும்.

இவை அனைத்துக்கும் மேலாக பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சமூகநீதி கிடைக்க பெரும் தடையாக இருக்கும், இந்திய அரசியல் சட்டம் உள்ளிட்ட எந்த சட்டத்திலும் இல்லாமல் திணிக்கப்பட்ட கிரீமிலேயர் முறைக்கு முடிவு கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News