செய்திகள்
வாக்கு எண்ணிக்கை

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர்கள்-வார்டு கவுன்சிலர்கள் புதன்கிழமை பதவி ஏற்கிறார்கள்

Published On 2021-10-17 11:42 GMT   |   Update On 2021-10-17 11:42 GMT
பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவி இடங்களில் 3,221 பேர் போட்டியின்றி தேர்வானார்கள். 19,964 பேர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சென்னை:

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல் வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9-ந்தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட்டன.

இதுதவிர 27 மாவட்டங்களில் காலியாக இருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 151 பேர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2 பேர் போட்டியின்றி தேர்வானார்கள். தி.மு.க. 139 இடங்களிலும், காங்கிரஸ் 9, அ.தி.மு.க. 2 இடங்களையும் கைப்பற்றியது. சுயேட்சைகள் 3 பேர் இதில் வெற்றிபெற்றனர்.

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் 5 பேர் போட்டியின்றி தேர்வானார்கள். 1,415 உறுப்பினர்கள் தேர்தலில் வெற்றிபெற்றனர். இதில் தி.மு.க. 980 இடங்களையும், அ.தி.மு.க. 213 இடங்களிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 33 இடங்களிலும், பா.ஜனதா 8, மார்க்சிஸ்டு 4, இந்திய கம்யூனிஸ்டு 3, தே.மு.தி.க. 1 மற்றவர்கள் 178 இடங்களிலும் வெற்றிபெற்று இருந்தனர்.

இதேபோல் பஞ்சாயத்து தலைவர் பதவிகளில் 137 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2,865 பேர் தேர்தலில் வெற்றி பெற்றனர்.

பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவி இடங்களில் 3,221 பேர் போட்டியின்றி தேர்வானார்கள். 19,964 பேர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் வருகிற புதன்கிழமை (20-ந் தேதி) பதவி ஏற்றுக் கொள்கிறார்கள். இதைத்தொடர்ந்து மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

அதே தினத்தில் பஞ்சாயத்து துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தலும் (22-ந்தேதி) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்... நவம்பர் 1-ந்தேதி தமிழ்நாடு தினம் கொண்டாட வேண்டும்- தொல்.திருமாவளவன் கோரிக்கை

Tags:    

Similar News