உள்ளூர் செய்திகள்
அரியலூரில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி பேசிய போது எடுத்த படம்.

சிமெண்டு ஆலைகள் ஆக்கிரமித்துள்ள நீர் நிலைகளை மீட்க கோரிக்கை

Published On 2022-05-06 10:11 GMT   |   Update On 2022-05-06 10:11 GMT
அரியலூர் மாவட்டத்தில் தனியார் சிமெண்டு ஆலைகள் ஆக்கிரமித்து வைத்துள்ள நீர் நிலைகளை மீட்க வேண்டும் என்று கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
அரியலூர்:


அரியலூர் அரசு சிமெண்ட் ஆலை இறகுப்பந்தாட்ட கூடத்தில் கல்லங்குறிச்சி அமீனாபாத் ஆகிய பகுதிகளில் அரசு சிமெண்ட் ஆலை சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்கம் செய்வது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சாரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. 

கூட்டத்தில் அரியலூர் சிமெண்ட் ஆலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நீர்நிலைகளை மீட்க வேண்டும், சுண்ணாம்புக்கல் சுரங்கம் விரிவாக்கம் செய்ய அனுமதிக்கக்கூடாது, அரசு சிமெண்டு ஆலைக்கு நிலம் அளித்த விவசாயிகளின் குடும்பத்தினர் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்கள் அரசு வழிகாட்டுதலின் படி ஊதியம் மற்றும் இதர சலுகைகளை வழங்க வேண்டும்.

சிமெண்டு ஆலையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். சாலையோரம் இரு புறங்களிலும் லாரிகளை நிறுத்த தடை விதிக்க வேண்டும். ஆலை மற்றும் சுரங்கங்களில் தொழிலாளர் நலச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

நீதிமன்றம் உத்தரவுப்படி நீர் நிலைகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீடுகள் இடிக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது. அது போல் சிமென்ட் ஆலைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வரத்து வாய்க்கால், ஓடைகள், ஏரிகள், குளங்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு சிமென்ட் ஆலை நிறுவனம் தனது சமூக பொறுப்புணர்வுத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியை கிராமப் பகுதிகளில் பயன்படுத்துவதே கிடையாது. இந்நிறுவனம் இதுவரை எந்தவித அடிப்படை வசதிகளும் செய்ததில்லை.

விவசாயிகளிடமிருந்து நிலம் வாங்கும் போது அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றவில்லை. நிலம் அளித்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு வேலை வழங்காமல் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டத்தினருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே சுண்ணாம்புக் கல் சுரங்கத்தினால் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ள நிலையில், மேலும் சுண்ணாம்புக் கல் விரிவாக்கம் செய்ய அனுமதி தரக்கூடாது. அதற்கு பதிலாக கிராமப் பகுதிகளில் சிறு தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சுண்ணாம்புக் கல் சுரங்கங்களுக்கு இயக்கப்படும் லாரிகளால் அதிகளவில் விபத்துகள் நிகழ்கிறது. ஆகவே கல்லங்குறிச்சி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். குறிப்பாக லாரிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்ந்து பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்த கலெக்டர், அவைகளை டெல்லியிலுள்ள மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News