செய்திகள்
மதியம்பட்டி ஏரியில் தண்ணீர் நிரம்பி மறுகால் பாவி செல்வதை காணலாம்

வெண்ணந்தூரில் 7 ஏரிகள் நிரம்பின- விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2021-10-21 09:55 GMT   |   Update On 2021-10-21 09:55 GMT
சேர்வராயன் மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் வெண்ணந்தூர் பகுதியில் உள்ள 7 ஏரிகள் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெண்ணந்தூர்:

சேலம் சேர்வராயன் மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் அங்கிருந்து செல்லும் தண்ணீரானது திருமணிமுத்தாறு வழியாக பூலாவரி ஏரி, மின்னக்கல் ஏரி, கட்டிபாளையம் ஏரி, பூலான்குட்டை, சவுரிபாளையம், மதியம்பட்டி, அக்கரைப்பட்டி, சேமூர் போன்ற ஏரிகள் வழியாக சென்று மீண்டும் பரமத்திவேலூர் அருகே உள்ள காவிரி ஆற்றில் கலக்கிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சேலம் பகுதியில் பெய்து வரும் கன மழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மின்னக்கல், கட்டிபாளையம், பூலான்குட்டை, சவுரிபாளையம், மதியம்பட்டி, அக்கரைப்பட்டி, சேமூர் ஆகிய 7 ஏரிகள் தண்ணீர் நிரம்பி மறுகால் செல்கிறது.

இதனால் அந்தந்த ஏரிகளின் ஆயக்கட்டு பாசனமாக உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த பகுதியில் நெல், கரும்பு, மக்காச்சோளம், பருத்தி மற்றும் நீண்டகால பயிரான தென்னை, பாக்கு போன்றவைகள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இதுநாள் வரை தண்ணீர் வரத்து இல்லாத நிலையில் ஏரிகள் வறண்டு மேய்ச்சல் நிலமாக இருந்து வந்தது.

தற்போது பெய்த மழையினால் அனைத்து ஏரிகளும் நிரம்பி உள்ளது. இனிவரும் நாட்களில் பெய்யும் மழைநீர் வீணாக கடலுக்கு செல்லும் நிலை உள்ளது.

மேலும் வெண்ணந்தூர், அலவாய்ப்பட்டி, நடுப்பட்டி, செம்மாண்டப்பட்டி ஏரிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல ஏரிகளில் தண்ணீர் இன்றி சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு உபரி நீரை வறண்டு கிடக்கும் ஏரிகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News