செய்திகள்
பசவராஜ் பொம்மை

கர்நாடகத்துக்கு தேவையான நிலக்கரி இன்னும் ஓரிரு நாட்களில் கிடைக்கும்: பசவராஜ் பொம்மை

Published On 2021-10-15 02:39 GMT   |   Update On 2021-10-15 02:39 GMT
மங்களூருவில் சில வாலிபர்களே சட்டத்தில் கையில் எடுத்து போலீஸ் போல் செயல்படும் சம்பவங்கள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் வருகிறது.
பெங்களூரு :

பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

நாடு முழுவதும் நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. கடந்த வாரம்ட கர்நாடகத்திற்கு 8 ரேக் நிலக்கரி மத்திய அரசிடம் இருந்து வந்திருக்க வேண்டும். ஆனால் கர்நாடகத்திற்கு கிடைக்க வேண்டிய நிலக்கரி வந்து சேரவில்லை. சில பிரச்சினைகளால் கர்நாடகத்திற்கு கிடைக்க வேண்டிய நிலக்கரி வந்து சேரவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் விதமாக ஏற்கனவே மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியை டெல்லியில் சந்தித்து பேசி இருந்தேன்.

அப்போது கர்நாடகத்திற்கு தேவையான நிலக்கரியை உடடியாக வழங்கும்படி அவரிடம் கோரிக்கை விடுத்திருந்தேன். ஓரிரு நாட்களில் மத்திய அரசிடம் இருந்து கர்நாடகத்திற்கு தேவையான நிலக்கரி கிடைக்கும். மத்திய மந்திரியும் உறுதி அளித்துள்ளார். இதன் மூலம் கர்நாடகத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படுவது தவிர்க்கப்படும். மத்திய அரசு மீது நம்பிக்கை உள்ளது.

மாநிலத்தில் எந்த அளவு நிலக்கரி இருக்கிறது, தற்போது அதன் பயன்பாடு எந்தஅளவுக்கு இருக்கிறது, ஏற்கனவே மத்திய அரசிடம் இருந்து வந்துள்ள நிலக்கரியின் அளவு என்ன? உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் உயர் அதிகாரிகளிடம் இருந்து பெற்றுக் கொண்டுள்ளேன். ஓரிரு நாட்களில் நமக்கு தேவையான நிலக்கரி கிடைத்து விடும் என்பதால், மின் உற்பத்தியில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது.எனவே மக்கள் யாரும் ஆதங்கப்பட வேண்டிய அவசியமில்லை.

தசரா விழா முடிந்த பின்பு கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளேன். இந்த ஆலோசனை கூட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்புக்களுக்கான பள்ளிகளை திறப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும். கூட்டத்தில் நிபுணர்களின் ஆலோசனையை பெற்று பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும். பள்ளிகளை திறப்பதில் அரசு அவசரம் காட்டவில்லை. ஏனெனில் மாணவ, மாணவிகளின் உடல் நலம் தான் முக்கியமாகும்.நிபுணர்கள் குழுவினர் கூறும் அறிவுரையை ஏற்று, அரசு திடமான முடிவு எடுக்கும்.

2 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்காக சில விதிமுறைகள் உள்ளது. அந்த விதிமுறைகளை கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி கர்நாடகத்தில் தொடங்கப்படும். மத்திய அரசு மற்றும் சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின்படியே குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும். மங்களூருவில் சில வாலிபர்களே சட்டத்தில் கையில் எடுத்து போலீஸ் போல் செயல்படும் சம்பவங்கள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் வருகிறது. இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும். சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Tags:    

Similar News