வழிபாடு
தோரணமலை முருகன் கோவில்

தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா 18-ந்தேதி நடக்கிறது

Published On 2022-01-05 05:24 GMT   |   Update On 2022-01-05 05:24 GMT
தோரணமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு தமிழ்மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு பூஜைகளும், விவசாயிகள் வாழ்வு முன்னேற சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது, தோரணமலை. இங்கு மலை உச்சியில் கிழக்கு நோக்கிய குகையில் முருகப்பெருமான் அருள் பாலிக்கிறார். அகத்தியர், தேரையர் போன்ற சித்தர்களால் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்யப்பட்டு, காலம் காலமாக வழிபாடு நடந்து வருகிறது. மலையே தோரணம்போல் அமைந்து உள்ளதால் தோரணமலை என்று பெயர் காரணத்துடன் விளங்குகிறது.

மலையேறி முருப்பெருமானை தரிசனம் செய்வதற்கு பக்தர்களால் 1,100-க்கும் மேற்பட்ட படிகள் அமைக்கப்பட்டுள்ளது. மலையைச்சுற்றி 64 சுனைகள் இருக்கிறது. இந்த சுனை நீரால் முருகப்பெருமானுக்கு தினமும் அபிஷேகம் நடக்கிறது. ஒவ்வொரு தமிழ்மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு பூஜைகளும், விவசாயிகள் வாழ்வு முன்னேற சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது. மேலும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் நடைபெறும்.

அந்தவகையில், தோரணமலையில் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகிற 18-ந்தேதி தைப்பூச திருவிழா நடக்கிறது. விழாவையொட்டி அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். 5.30 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெறும்.

தொடர்ந்து வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி திருக்கல்யாணம் நடக்கிறது. பின்னர் ஊட்டி படுகையின மக்களின் பாரம்பரிய நடனம் நடைபெறும். பகல் 11.45 மணிக்கு விடுதலைப்போராட்ட தியாகிகளின் குடும்பத்தார் மற்றும் உயிர் தியாகம் செய்த ராணுவத்தினரின் குடும்பத்தினர், முன்கள பணியாளர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள்.

12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், பகல் 1 மணிக்கு சிறப்பு அன்னதானமும் நடக்க இருக்கிறது. மாலை 6 மணிக்கு 501 சரவண ஜோதி விளக்கு பூஜை நடைபெறும். இரவு 7 மணிக்கு வள்ளியம்மாள்புரம் திருமுருகன் உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் குடும்பத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News