செய்திகள்
பிரதமர் மோடி - சீன அதிபர்

புதிய சிக்கல்கள் உருவாக இனி அனுமதிக்க மாட்டோம் - பிரதமர் மோடி

Published On 2019-10-12 08:45 GMT   |   Update On 2019-10-12 08:45 GMT
இரு நாடுகளுக்கும் இடையே இனி புதிய பிரச்சினைகள் தோன்றுவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த சந்திப்பு மூலம் புதிய உற்சாகமும், நம்பிக்கையும் கிடைத்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.
சென்னை:

கோவளத்தில் இன்று சீன அதிபர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

சீனாவில் கடந்த ஆண்டு வூகான் நகரில் நான் அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினேன். அதன் பிறகு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உறவு தொடர்ந்து மேம்பாட்டு வருகிறது.

இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு தொடர்ந்து முன்னேற்றம் பெற வேண்டும். இரு நாடுகளின் ராஜதந்திர உறவுகள் மேலும் பலப்பட வேண்டும். அதற்கு இந்த சந்திப்பு நிச்சயம் உதவிகரமாக அமையும்.

இரு நாடுகளுக்கு இடையே உள்ள சில பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். அதற்கு பரஸ்பர ஒத்துழைப்பு அவசியமாகும். அதற்கு அடித்தளம் அமைக்கும் வகையில் சென்னையில் இன்று இந்த சந்திப்பு நடந்துள்ளது.



இந்தியா-சீனா இடையே நட்பின் வாசலாக மாமல்லபுரம் மாறி உள்ளது. இந்த நட்பை இனி மேம்படுத்த வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் இனி பேச்சு வார்த்தைகள் நடைபெறும்.

இரு நாடுகளுக்கும் இடையே இனி புதிய பிரச்சினைகள் தோன்றுவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த சந்திப்பு மூலம் புதிய உற்சாகமும், நம்பிக்கையும் கிடைத்து உள்ளது. இது தொடரும்.

இந்தியாவும், சீனாவும் 100 கோடி மக்கள் தொகையை தாண்டிய நாடுகளாகும். உலகின் சக்தி வாய்ந்த நாடுகளாக இரு நாடுகளும் உள்ளன. தமிழ்நாட்டுக்கும் சீனாவுக்கும் 2 ஆயிரம் ஆண்டுக்கு முன்பே மிகவும் ஆழமான கலாச்சார, கலை மற்றும் வர்த்தக தொடர்பு இருந்தது.

அந்த வகையில் இந்தியாவும், சீனாவும் பொருளாதார சக்தி மிக்க நாடுகளாக பாரம்பரியமாக நீடித்து வருகின்றன. பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளின் வியூகம், ஸ்திரத்தன்மையுடன் அமைய வேண்டும்.

மேலும் இரு நாடுகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து பரிமாற்றம் இருக்க வேண்டும். அப்படி அமைந்தால் இரு நாடுகளின் உறவும், ஒருங்கிணைப்பும் மேலும் வலுப்படும். அதற்கு நாம் வழி காண வேண்டும்.

சீன அதிபர் மற்றும் அதிகாரிகளின் வருகை எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. பல புதிய வி‌ஷயங்களில் தெளிவு கிடைத்துள்ளது. அந்த வகையில் இந்த சந்திப்பு புதிய சகாப்தத்தை படைத்துள்ளது.

இரு தரப்பு உறவு, தகவல் தொடர்பு மேம்பட்டு வருகிறது. எதிர்காலத்திலும் இந்த நட்பு நீடிக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

தமிழில் பேச்சை தொடங்கிய மோடி பிறகு இந்தியில் உரையாற்றினார். இடையிடையே ஆங்கிலத்திலும் பேசினார்.
Tags:    

Similar News