ஆன்மிகம்
சதுரகிரி

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 2 நாட்கள் அனுமதி

Published On 2020-09-01 08:32 GMT   |   Update On 2020-09-01 08:32 GMT
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகம் 2 நாட்கள் அனுமதி வழங்கி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது.இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்த நிலையில் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம், வனத்துறையால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டனர். அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாள், பிரதோஷத்திற்கு 1 நாள் என பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில் கொரோனா பரவலை தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனையடுத்து தாணிப்பாறை வனத்துறை நுழைவுவாயில் மூடப்பட்டது. தற்போது தமிழக அரசு அனைத்து கோவில்கள், வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கி உள்ளது. இந்தநிலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது குறித்து சதுரகிரி சுந்தரமகாலிங்கசுவாமி கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி மற்றும் செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் கூறியதாவது:-

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆவணி மாத பவுர்ணமிக்கு இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆகியோரை அழைத்து வருவதை தவிர்க்கவேண்டும். கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரக்கூடிய பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி, முக கவசம் அணிந்து வரவேண்டும்.

பக்தர்கள்அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் சளி, காய்ச்சல், இருமல் இருந்தால் வருவதை தவிர்க்கவும். பக்தர்கள் யாரும் மலையில் தங்குவதற்கு அனுமதி இல்லை. கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் குடிநீர், அன்னதானம் வழங்கப்படும். வருகைதரும் பக்தர்கள் கோவில் நிர்வாகத்திற்கும், வனத்துறைக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News