செய்திகள்
கேஎஸ் அழகிரி

நடிகர் சித்தார்த்துக்கு கொலைமிரட்டல் விடுத்த பா.ஜ.க.வினர் மீது நடவடிக்கை - கே.எஸ்.அழகிரி கோரிக்கை

Published On 2021-04-30 06:45 GMT   |   Update On 2021-04-30 06:45 GMT
மக்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் டுவிட்டர் மூலம் துணிவுடன் எவ்வித தயக்கமும் இல்லாமல் மக்கள் நலனில் அக்கறையோடு, நியாயக் குரல் எழுப்பியவர் நடிகர் சித்தார்த் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் வருமாறு:-

மக்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் டுவிட்டர் மூலம் துணிவுடன் எவ்வித தயக்கமும் இல்லாமல் மக்கள் நலனில் அக்கறையோடு, நியாயக் குரல் எழுப்பியவர் நடிகர் சித்தார்த்.

கொரோனாவின் இரண்டாவது அலையின் போது, மக்கள் படும் துயரத்தைப் பல பிரபலங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிற வேளையில் இவரது குரல் வித்தியாசமாக இருந்து வருகிறது.

இவர் ஒருவர் மட்டுமே துணிவோடு குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இவரை தேசப்பற்றாளர்கள் பாராட்டாமல் இருக்க முடியாது.

உத்தரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் இல்லை என்று யாராவது பிரச்சாரம் செய்தால், அவர்களது சொத்துகள் பரிமுதல் செய்யப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரித்திருந்தார்.

இதற்குப் பதில் அளித்து டுவீட் செய்திருந்த சித்தார்த், 'பொய் சொல்வது சாமானிய மனிதனோ, சாமியாரோ, தலைவரோ யாராக இருந்தாலும் கன்னத்தில் விழும் அறையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்' என்று கடுமையாக கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.


இந்நிலையில், சித்தார்த்தின் தொலைப்பேசி எண்ணை வெளியிட்டு, அவரை விமர்சித்துத் துன்புறுத்துமாறு தங்கள் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மூலம் தமிழக பா.ஜ.க.வினர் கேட்டுக்கொண்டனர்.

இதனையடுத்து, டுவீட் செய்துள்ள சித்தார்த், '500க்கும் மேற்பட்டோர் என் செல்பேசி எண்ணுக்கு போன் செய்து குடும்பத்தாருக்கு போன் செய்து, கொலை செய்துவிடுவோம் என்றும் பாலியல் வன்முறையில் ஈடுபடுவோம் என்று மிரட்டுகிறார்கள்'என்று டுவீட் செய்திருந்தார்.

இந்த டுவிட்டை பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் டேக் செய்துள்ளார் சித்தார்த். இது குறித்து காவல் துறையிலும் புகார் செய்துள்ளார்.

ஜனநாயக விரோத அணுகுமுறையை கொண்டுள்ள பா.ஜ.க.வினர், நடிகர் சித்தார்த் ஆரோக்கியமான, மக்கள் உரிமை சார்ந்த கருத்துக்களை வெளியிட்டதற்காக இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளில் பா.ஜ.க.வினர் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் சித்தார்த் கொடுத்த புகாரின் பேரில் சம்மந்தப்பட்ட பா.ஜ.க.வினர் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News