செய்திகள்
கோப்புபடம்

உடுமலை அரசு கல்லூரியில் வரலாறு படிப்பு-மாணவர்கள் விருப்பம்

Published On 2021-07-19 09:56 GMT   |   Update On 2021-07-19 09:56 GMT
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அரசு கலைக்கல்லூரியை மட்டுமே தங்கள் உயர் கல்விக்கு நம்பியுள்ளனர்.
உடுமலை:

உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். மடத்துக்குளம், உடுமலை, தாராபுரம், பொள்ளாச்சி என திருப்பூர் மற்றும் கோவை புறநகர் பகுதிகளைச்சேர்ந்த மாணவர்களின் உயர்கல்வியில் உடுமலை கல்லூரி முக்கிய பங்கு வகிக்கிறது.

தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், பொருளியல், கணிதம், வேதியியல், இயற்பியல், புள்ளியியல், தாவரவியல், கணினி அறிவியல், வணிகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய இளங்கலை படிப்புகள் கல்லூரியில், உள்ளன. முதுகலையில், சுற்றுலாவியல் உள்ளிட்ட படிப்புகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. 

ஆனால் கல்லூரி தொடங்கி 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் வரலாற்றுத்துறை மட்டும் இதுவரை தொடங்கப்படவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச்சேர்ந்த மாணவர்கள் அரசு கலைக்கல்லூரியை மட்டுமே தங்கள் உயர் கல்விக்கு நம்பியுள்ளனர்.

குறிப்பாக வரலாறு உள்ளிட்ட படிப்புகளை இளங்கலையில் முடித்து அரசின் போட்டித்தேர்வுகளுக்கு தயாராக மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். மாநிலத்திலுள்ள அனைத்து அரசு கலைக்கல்லூரிகளிலும் வரலாற்று துறை சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் உடுமலை கல்லூரியில் மட்டும் இந்த படிப்பு துவக்கப்படாமல் உள்ளது.

இதுகுறித்து கல்வியாளர்கள் அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், உடுமலை அரசு கலைக்கல்லூரியில் வரலாற்றுத்துறை தொடங்கியிருந்தால் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெற்றிருப்பார்கள். மேலும், இத்துறையில் ஆய்வியல் மாணவர்களும் முனைவர் பட்ட ஆய்வாளர்களும் உருவாகியிருப்பார்கள்.

தற்போது கல்லூரியில் காலை, மாலை என இரு பிரிவுகளாக பிரிக்கும் அளவுக்கு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப அரசு கட்டமைப்பு வசதிகளையும் படிப்படியாக மேம்படுத்தி வருகிறது. வரலாற்றுத்துறைக்கு தேவையான பேராசிரியர்கள் உள்ளிட்ட வசதிகள் இருப்பதால் வரும் கல்வியாண்டில் இத்துறையில் மாணவர் சேர்க்கையை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News