செய்திகள்
தாராபுரம் மஹாராணி கல்லூரி தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகளை சோதனை செய்து அனுப்பும் பணியாளர்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு-மாணவர்கள் ஆர்வமுடன் எழுதினர்

Published On 2021-09-12 09:38 GMT   |   Update On 2021-09-12 09:38 GMT
தேர்வை மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைத்து நடத்தி முடிக்கும் பொறுப்பு கே.எம்.சி., பப்ளிக் பள்ளிக்கு தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.,) வழங்கி இருந்தது.
திருப்பூர்:

மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. இந்த ஆண்டு முதல் திருப்பூர் மாவட்டத்திலும் புதிதாக மையங்கள் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. 

அதன்படி மாவட்டத்திற்குட்பட்ட  கூலிபாளையம் வித்யாசாகர் மெட்ரிக் பள்ளி, சின்னக்கரை ஜெயந்தி மெட்ரிக் பள்ளி, பழங்கரை டீ பப்ளிக் பள்ளி, சோளிபாளையம் லிட்டில் கிங்டம் பள்ளி, விஜயமங்கலம் சசூரி என்ஜினீயரிங் கல்லூரி, திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., கலை அறிவியல் கல்லூரி, தாராபுரம் மஹாராணி கலை அறிவியல் கல்லூரி,  உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லூரி ஆகிய 8 மையங்கள்  அமைக்கப்பட்டன. இதில் மொத்தம் 3,988 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

தேர்வை  மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைத்து நடத்தி முடிக்கும் பொறுப்பு  கே.எம்.சி., பப்ளிக் பள்ளிக்கு தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.,) வழங்கி இருந்தது. திருப்பூர் மட்டுமின்றி   தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து  ஏராளமான மாணவர்கள்  இன்று காலையிலேயே  தேர்வு மையங்களுக்கு வந்தனர்.

காலை11 மணிக்கே பிறகு அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதுவரை தேர்வு மையத்தின் வெளியே ஆங்காங்கே  அமர்ந்து படித்தனர். மதியம்  1.30 மணிவரை மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மதியம் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5மணியுடன் முடிவடைந்தது.

பசியுடனே தேர்வெழுத வேண்டியிருப்பதாக கடந்த ஆண்டுகளில் மாணவர்கள் புகார் எழுப்பினர். இதனால்  மாணவர்களுக்கு குளுக்கோஸ், பிஸ்கட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காத்திருக்கும் பெற்றோர்கள் வசதிக்காக தேர்வு மைய வளாகத்தில் ‘காத்திருப்பு பகுதி’ மற்றும் ‘கேன்டீன் வசதி’ பிரத்யேகமாக அனைத்து மையங்களிலும் அமைக்கப்பட்டு இருந்தது.

நீட் தேர்வு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகமணி கூறுகையில், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் தாமதமானாலும்  மதியம் 1:30 மணி வரை மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.  மாணவர்கள் கடைசி அரைமணி நேரம் மாலை, 4:30 -5:00 மணி வரை கழிப்பறை உள்ளிட்ட காரணங்களுக்காக வெளியே செல்லக்கூடாது என அறிவுறுத்தி அனுப்பப்பட்டனர். மாணவர்கள் ஆர்வமுடன் தேர்வை எழுதினர் என்றார்.


கூலிபாளையம் வித்யாசாகர் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட காட்சி.

கொரோனா காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். கைகளில் சானிடைசர் தெளிக்கப்பட்டது. அனைத்து தேர்வு மையங்களிலும் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

தண்ணீர் பாட்டில் மற்றும், 50 மி.லி., சானிடைசர் பாட்டில் மட்டுமே தேர்வறைக்குள் எடுத்து செல்ல மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஒவ்வொரு தேர்வறைக்கும் 2 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மாணவர்கள்  தேர்வு மையங்களுக்கு எந்தவித சிரமமின்றி செல்லும் வகையில் போலீசார்  பல்வேறு ஏற்பாடுகளை  செய்தனர். அதன்படி கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சஷாங்சாய் தலைமையிலான குழு போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள்  முக்கிய இடங்களில்   போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News