செய்திகள்
கோப்பு படம்.

புதுவை காமராஜர் நகர் தொகுதியில் நாளை வாக்குப்பதிவு

Published On 2019-10-20 11:28 GMT   |   Update On 2019-10-20 11:28 GMT
புதுவை மாநிலம் காமராஜர் நகர் தொகுதியில் நாளை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி

புதுவை காமராஜர் நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வைத்திலிங்கம் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதுனால் காமராஜர் நகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். காலியான காமராஜர் நகர் சட்டமன்ற தொகுதிக்கு நாளை இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தலில் மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனா என்ற புவனேஸ்வரனும், மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெற்றிச்செல்வம், நாம் தமிழர் கட்சி சார்பில் பிரவீனா, சோசலிச கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லெனின்துரை உள்ளிட்ட 9 பேர் போட்டியிடுகின்றனர்.  

அனைத்து வாக்குச் சாவடிகளும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வாக்குச்சாவடிகளுக்கு துணை ராணுவம், போலீஸ் பாதுகாப்புடன் லாஸ்பேட்டை அரசு பாலிடெக்னிக்கில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. வாக்குச்சாவடியில் பணியாற்றும் அதிகாரிகள் இன்று மதியம் வாக்குச்சாவடிக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். 32 வாக்குச்சாவடிகளில் 7 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டு உள்ளது. 

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் துணை ராணுவத்தை சேர்ந்த வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குச்சாவடிக்கு செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி பாதுகாப்பு அறைக்கு கொண்டுசெல்லப்படுகிறது. 
Tags:    

Similar News