லைஃப்ஸ்டைல்
பெற்றோர்களின் சண்டை பிள்ளைகளுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும்

பெற்றோர்களின் சண்டை பிள்ளைகளுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும்

Published On 2020-06-17 06:57 GMT   |   Update On 2020-06-17 06:57 GMT
பாசத்தைக் காட்ட வேண்டிய பெற்றோர் தங்களுக்குள் தொடர்ந்து வம்பும், வழக்கோடும் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் அந்த வீடு குழந்தைகளுக்கு ஒரு நரகமாகத்தான் தென்படும்.
துரத்திவரும் வெளி உலக துன்பங்களிலிருந்து ஒருவருக்கு அடைக்கலம் கொடுப்பது அவரவர் வீடு மட்டுமே. வீடு என்பது வெறும் கல்லாலும் மண்ணாலும் ஆன கட்டிடம் மட்டும் அல்ல. குறிப்பாக குழந்தைகளுக்கு வீடு என்பது பெற்றோர், உற்றார், உறவினர் என அனைவரின் அன்பு, அரவணைப்பு, நேசம், பாசம் என அனைத்தோடும் அடைக்கலமாக்கும் ஆனந்தமாக உணரும் இடம். ஆனால் அப்படிப்பட்ட வீடே பாதுகாப்பற்றதாக மாறும்போது வேறு போக்கிடம் இல்லை என்றகையறு நிலையே தோன்றுவது இயல்பு.

அதுவும் பாசத்தைக் காட்ட வேண்டிய பெற்றோர் தங்களுக்குள் தொடர்ந்து வம்பும், வழக்கோடும் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் அந்த வீடு குழந்தைகளுக்கு ஒரு நரகமாகத்தான் தென்படும். இந்தச் சூழல் குழந்தைகள் மனதில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தி அவர்களை உதவியற்றவர்களாக உணரச் செய்கிறது. இந்த பாதிப்புஅக்குழந்தையின்வாழ்நாள் முழுவதும் துரத்திக்கொண்டே இருக்கும்.

கொரோனா எனும் கொடூரனின் பிடியில் சிக்காமல் நம்மைத் தற்காத்துக்கொள்ளும் வகையில் நாம் அனைவரும் நம் வீட்டிற்குள் அடைக்கலமாகியுள்ள இந்த காலகட்டத்தில் மனக்கட்டுப்பாடும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் பரந்த மனப்பான்மையும் மிகவும் அவசியம். தேவையற்ற வாக்குவாதங்களும், சண்டை சச்சரவுகளும், பெரியவர்களைக்காட்டிலும் குழந்தைகளையும், இளைஞர்களையும் பெரிதும் பாதித்துவிடும் என்பதை உணரவேண்டும்.

பெற்றோர்கள் சண்டையிடும்போது குழந்தைகளின் மனநிலை எந்த அளவிற்குப் பாதிப்படைகிறது என்பதை பல பெற்றோர்கள் உணர்வதேயில்லை. பெரும்பாலும் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய்விடுகிறார்கள். சிக்கலான அந்த நேரத்தில் தாங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று புரியாமல் குழப்பமடைகிறார்கள்.

சின்ன குழந்தைகளோ, சற்று வளர்ந்த பதின்மப்பருவத்தினரோ பெற்றோர்கள் சண்டையிடுவதைக் கண்டு செய்வதறியாது அழ ஆரம்பிக்கிறார்கள். பெற்றோரின் அனல் தெறிக்கும் சூடான விவாதங்களைக் காணும்போதும் இருவரில் யாருக்காவது ஏதும் நேர்ந்துவிடுமோ என்று அஞ்சுவதோடு தங்களை பாதுகாப்பற்றவர்களாகவும் உணர்கிறார்கள்.

பெற்றோரின் இந்த நடத்தைகளை குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் விளையாட்டு நேரத்திலோ, பள்ளியிலோ அல்லது உடன்பிறப்புகள் மற்றும் நண்பர்களுடன் இருக்கும்போதோ அப்படியே பிரதிபலிக்கிறார்கள். இதனால் அவர்கள் அடுத்தவரை கொடுமைப்படுத்துபவர்களாக மாறுவதற்கும் வாய்ப்பாகிவிடுகிறது. சக தோழர்களுக்கு வேதனையை ஏற்படுத்துவதன் மூலம் தாம் ஆறுதலடைய முயல்கிறார்கள். சில குழந்தைகள் உணர்ச்சிவசப்பட்டு தங்களைத் தாங்களே துன்புறுத்திக்கொள்கிறார்கள் அல்லது செல்லப் பிராணிகள் மீது கோபத்தைக் காட்டுகிறார்கள்.

சற்று வளர்ந்த சில குழந்தைகள் வீட்டை விட்டு ஓடவும் நினைக்கிறார்கள். சிலர் வீட்டிற்குச் செல்ல அஞ்சி நீண்ட நேரம் பள்ளியில் தங்கி நேரத்தைக் கடத்த முயல்கிறார்கள். குழந்தைகள் மட்டுமின்றி வீட்டில் இருக்கும் முதியோருக்கும் இதே சிக்கலான நிலைதான் என்பதையும் நினைவில் கொள்க!

அடுத்தவரிடம் இரக்கம் காட்டுவதன் மூலம் நம் மனநிலையில் நேர்மறை எண்ணங்கள் வளர்ச்சியடைவதைப்போன்று, வாதங்களும், விவாதங்களும், அதிக கோபத்தோடு, இருதய பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்தல் போன்ற பல எதிர்மறை பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

இரக்கம் காட்டுவது என்பது நல்லொழுக்க நெறி என்பதை புத்தர், அரவிந்தர், விவேகானந்தர், தாயுமானவர், பட்டிணத்தடிகள் போன்ற தவசீலர்கள் பலவகையில் எடுத்துரைத்திருந்தாலும் அதனைக் கடைப்பிடிப்பது அவ்வளவு எளிதான காரியமாக இருப்பதில்லை. இரக்கமற்ற பெற்றோரின் தேவையற்ற விவாதங்களால் குழந்தைகளின் மனநிலை எந்த அளவிற்குப் பாதிக்கப்படுகின்றன என்பதை அவர்கள் அறிவதில்லை. குழந்தைகள் தங்கள் ஆழ்மனதில் பெற்றோருடன் ஒன்றிணைந்து வாழும் நிலையில்அவர்களின் நடத்தையும் வாழ்க்கையைப் பற்றிய அணுகுமுறையும் குடும்பத்தினுள் ஏற்படும் மோதல்களால் பெரிதும் பாதிக்கப்படலாம்.

பெரும்பாலும் குழந்தையின் ஆளுமையின் ஒரு பகுதியை இது போன்ற அனுபவங்களே உருவாக்குவதால் அவர்களின் சமூக தொடர்புகளுக்கும் இடையூறு விளைவிக்கின்றன. தவறான சூழலில் வளரும் குழந்தைகளின் நடத்தை பெரும்பாலும் சிக்கலாகிவிடுகின்றன. அதிகமாகப் பொய் பேசுவது, திருடுவது, பொறுப்பில்லாமல் தங்களின் பொம்மைகள், போன்ற உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்துவது, தவறான மொழியைப் பயன்படுத்துவது போன்ற எதிர்மறை செயல்பாடுகளுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இது அனைத்தையும்விட மிக முக்கியமான ஒன்று, இது போன்று அமைதியற்ற சூழலில் பிறந்து வளரும் பெரும்பாலான குழந்தைகளுக்கு கவனக்குறைவு, அதீத செயல்பாட்டுக் குறைபாடு, கவலை, மனச்சோர்வு, அதிக கோபத்தை வெளிப்படுத்துவதுபோன்ற மனநலக் கோளாறுகள் உருவாகும் அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது அன்றாடம் வீட்டில் நடக்கும் சண்டைகளைச் சமாளிக்க முடியாமல் குழந்தைகள் மனநல கோளாறுகளுக்கு உள்ளாகின்றனர்.

சில குழந்தைகள் அதிக அளவில் உணவு சாப்பிடும் பழக்கத்தினால் உடல் பருமனாகவும் அல்லது மிகக்குறைவாக உண்ணும் பழக்கத்தினால் மிக மெலிந்தும் போகிறார்கள்.

கல்வி கற்றலில் பெரும் சிக்கலுக்கு ஆளாகும் சில குழந்தைகள் வீட்டில் உள்ள பொருட்களைச் சூறையாடுவது போன்று ஆபத்தான காரியத்திலும் ஈடுபடுவதோடு போதைப் பழக்கத்திற்கும் அடிமையாகிறார்கள்.

மன அழுத்தம் குழந்தைகளை மோசமாக பாதிப்பதால் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் இழந்து விடுகிறார்கள். இதனால் அடிக்கடி ஒவ்வாமை, தொற்று நோய்கள் போன்றவற்றின் தாக்கத்திற்கு உள்ளாவதால் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாகச் செயல்படுவதும் கடினமாகிவிடுகிறது.


Tags:    

Similar News