செய்திகள்
ஊத்துக்குளியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள், தொழிற்சங்கத்தினர் போராட்டம் - ஆயிரக்கணக்கானோர் கைது

Published On 2021-09-27 12:07 GMT   |   Update On 2021-09-27 12:07 GMT
மத்திய அரசுக்கு எதிராக எல்.பி.எப்., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் இன்று திருப்பூர் ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர் .
ஊத்துக்குளி:
 
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் இன்று நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் போராட்டத்திற்கு 100-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்திலும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள், தி.மு.க. காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை கட்சிகள், ஆட்டோ தொழிற்சங்கத்தினர், பல்வேறு அமைப்பினர் ரெயில் மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசுக்கு எதிராக எல்.பி.எப்., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் இன்று திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர் . 

போலீசார் தடுத்து நிறுத்தியதால் ரெயில் நிலைய வாசலிலேயே அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

உடுமலைப்பேட்டையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கம் சார்பில் உடுமலை ரெயில் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப்பெற வேண்டும்.

நாட்டின் பொது சொத்தை விற்கக்கூடாது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு முழுமையாக வங்கிக்கடனை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். 

இதேப்போல் உடுமலை சுற்றுப்பகுதியிலும் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட  500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 

ஊத்துக்குளியில் விவசாயிகள் முன்னணி மற்றும் அனைத்து தொழிற்சங்கம் சார்பாக ரெயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. தி.மு.க.கூட்டணி கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் பங்கேற்றனர். இதையொட்டி ஊத்துக்குளி ரெயில் நிலையத்தின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

இதேப்போல் மாவட்டத்திற்குட்பட்ட  தாராபுரம், காங்கேயம், பல்லடம் உள்ளிட்ட  பல்வேறு இடங்களில் விவசாயிகள், தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்லடம் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 70பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம்-ரெயில் மறியலுக்கு முயன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
 
போராட்டம் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், மளிகை, காய்கறி கடைகள், மார்க்கெட்டுகள் அனைத்தும் திறக்கப்பட்டிருந்தன. 

அங்கு வழக்கம் போல வியாபாரம் சுறு, சுறுப்பாக நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் தனியார் மற்றும் அரசு பஸ்களும் வழக்கம் போல் ஓடியது.
Tags:    

Similar News