தமிழ்நாடு
மிலானி

ஓ.பி.எஸ். மீது வழக்கு தொடர்ந்தவரிடம் போலீசார் விசாரணை தொடக்கம்

Published On 2022-01-11 06:56 GMT   |   Update On 2022-01-11 06:56 GMT
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி. ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவரிடம் குற்றப்பிரிவு போலீசார் இன்று விசாரணையை தொடங்கினர்.
தேனி:

தேனி மாவட்ட தி.மு.க. இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் மிலானி. இவர் தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 30-ந் தேதி ஒரு மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வமும், கடந்த பாராளுமன்ற தேர்தலில் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் தங்களது சொத்து, கடன் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை மறைத்து வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ளனர்.

இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம் இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து குற்றப்பிரிவு போலீசார் ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் ஆகியோர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125ஏ பிரிவின் கீழ் தனித்தனியாக வழக்கு பதிவு செய்தனர்.

இதன் விபரங்களை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சமர்பித்தனர். விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி. சுந்தர்ராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அங்கையற்கன்னி உள்பட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு, சொத்து விபரங்கள் உள்பட வழக்கு தொடர்பான விபரங்களை ஆய்வு செய்து விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணையின் இறுதி அறிக்கையை பிப்ரவரி 7-ந் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஓ.பி.எஸ். தரப்பில் வக்கீல் சந்திரசேகர் தேனி குற்றவியல் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஓ.பி.எஸ்., ரவீந்திரநாத் ஆகியோர் வேட்பு மனு தாக்கலின் போது விபரங்களை மறைத்ததாக குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதன் நகலை தங்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் முதல் கட்டமாக மனுதாரர் மிலானி இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அவரிடம் உள்ள ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சரிபார்த்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓ.பி.எஸ்., ரவீந்திரநாத் ஆகியோர் தவறான தகவல் அளித்ததாக கூறப்படும் புகாரில் மிலானியிடம் எந்தவிதமான ஆவணங்கள் உள்ளது என்று குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மனுதாரர் மிலானிக்கு ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News