செய்திகள்
இந்தியா - பாகிஸ்தான் எல்லை (கோப்பு படம்)

இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் 4 சுரங்கம் கண்டுபிடிப்பு

Published On 2021-07-18 09:36 GMT   |   Update On 2021-07-18 09:36 GMT
கடந்த ஒரு வருடத்தில் எல்லை வழியாக ஊடுருவ முயன்ற 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். எல்லையில் 165 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுடெல்லி:

ஜம்முவில் உள்ள விமானப்படை தளத்தில் சமீபத்தில் ட்ரோன்கள் (ஆளில்லா விமானம்) மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. முதல் முறையாக பயங்கரவாதிகள் ட்ரோன் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்துக்கு பிறகு ஜம்மு புறநகர் மற்றும் எல்லை பகுதிகளில் ட்ரோன்களின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்தது. பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு அவற்றை விரட்டியடித்தனர்.

இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் எல்லை பகுதியில் 61 ட்ரோன்கள் மற்றும் 4 சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்) தலைவர் ராகேஷ் அஸ்தானா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள சாவ்லா முகாமில் ‘ருஸ்டாம்ஜி’ நினைவு சொற்பொழிவில் அவர் இது தொடர்பாக பேசியதாவது:-


இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் 61 ட்ரோன்கள் மற்றும் 4 சுரங்கங்களை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த ஒரு வருடத்தில் எல்லை வழியாக ஊடுருவ முயன்ற 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். எல்லையில் 165 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரூ.2,786 கோடி மதிப்புள்ள 633 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 55 ஆயுதங்கள் மற்றும் 4,233 வெடி மருந்துகளும் கைப்பற்றப்பட்டன.

இதேபோல இந்தியா- வங்காளதேச எல்லையில் 12,821 கிலோ போதைப் பொருள், 61 ஆயுதங்கள், 7,926 வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊடுருவல்காரர்கள் 12 பேர் மற்றும் கடத்தல்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 3,984 பேர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இவ்வாறு எல்லை பாதுகாப்பு படை தலைவர் கூறினார்.

Tags:    

Similar News