செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதியில் உதயாஸ்தமன டிக்கெட் ஒரு ஆண்டுக்கு முன்பதிவு முடிந்து விட்டது- தேவஸ்தானம் தகவல்

Published On 2020-09-14 13:59 GMT   |   Update On 2020-09-14 13:59 GMT
திருப்பதியில் உதயாஸ்தமன டிக்கெட் ஒரு ஆண்டுக்கு முன்பதிவு முடிந்து விட்டது. எனவே பக்தர்கள் இடைத்தரர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

திருப்பதி:

திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் தொலைபேசி வாயிலாக பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தேவஸ்தான செயல்அதிகாரி அனில்குமார் சிங்கால் பதிலளித்தார்.

நிகழ்ச்சி நிறைவுக்கு பின் அவர் கூறியதாவது:-

திருப்பதி தேவஸ்தானத்தின் ஆண்டு கணக்கு வழக்குகள் அனைத்தையும் ஆந்திர அரசு தணிக்கை செய்து வருகிறது. ஆனால் இனி மத்திய அரசின் தணிக்கை பிரிவின்கீழ் தேவஸ்தானம் கணக்கு வழக்குகள் தணிக்கை செய்யப்படும்.

அனைவருக்கும் தேவஸ்தானத்தின் கணக்கு வழக்குகள் தெரியவேண்டும் என்று அறங்காவலர் குழுவில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதியில் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வாழ்நாள் முழுவதும் ஒரு குடும்பத்தை சேர்ந்த 6 பேர் ஒரு நாள் முழுவதும் திருமலையில் நடக்கும் ஏழுமலையான் சேவையில் காலை முதல் இரவு வரை பங்கேற்கும் உதயாஸ்தமன சேவைக்கு அடுத்த 365 நாட்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டு விட்டது.

எனவே இதற்கான முன்பதிவை தற்போது தேவஸ்தானம் நிறுத்தி வைத்துள்ளது.

அதேபோல் 20 ஆண்டுகளுக்கு குடும்பத்தில் உள்ள 6 பேர் ஒரு நாள் முழுவதும் காலை முதல் இரவு வரை கோவில் சேவைகளில் பங்கேற்கும் விம்சதி தர்சினி திட்டத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

எனவே இந்த டிக்கெட்டுகளை பெற்றவர்களுக்கு புரோட்டோகால் வி.ஐ.பி. தரிசனம் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது என்றார்.

திருமலைக்கு வரும் பக்தர்கள் தரிசனம், வாடகை அறை, பிரேக் தரிசன டிக்கெட்டுகள் உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் வெளிப்படையாக்கி உள்ளது.

எனவே பக்தர்கள் இடைத்தரர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

திருப்பதியில் நேற்று 14,072 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ரூ.1 கோடியே 4 லட்சம் உண்டியல் வசூலாகியுள்ளது.

Tags:    

Similar News