செய்திகள்
கொலை

வாலிபர் அடித்து கொலை- கைதான 3 பேரிடம் விடிய, விடிய விசாரணை

Published On 2019-10-03 14:39 GMT   |   Update On 2019-10-03 14:39 GMT
கிருஷ்ணகிரியில் கடன் தகராறில் வாலிபரை அடித்து கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விடிய, விடிய விசாரணை நடத்தினர்.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் அருகே உள்ள கக்கனூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாகலூர் போலீசார் அங்கு சென்று இறந்தவரின் உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில் கொலை செய்யப்பட்டவரின் அடையாளம் தெரிந்தது. அவர் கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த ராம் என்பவரது மகன் கவுதம் (வயது25) என்பதும், அதே பகுதியில் உள்ள லேப்-டெக்னீசியனாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில் கவுதம் கொலை சம்பவம்  தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த அருண், ரவிகுமார், மஞ்சுநாத் ஆகிய 3 பேரை  போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் கொலை தொடர்பாக விடிய, விடிய விசாரணை நடத்தினர். இதில் கவுதம், தனது நண்பரான அருணிடம் கடன் வாங்கினார். இந்த பணத்தை அருண் திருப்பி கேட்டுள்ளார். ஆனால், பல மாதங்களாக கவுதம் பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருண், கவுதமை கொலை செய்ய திட்டம் தீட்டினார். 

அதன்படி அருண் தனது நண்பர்களான ரவிக்குமார், மஞ்சுநாத் ஆகியோர் உதவியுடன் கவுதமை காரில் ஏற்றி கொண்டு வந்து பாகலூர் அருகே கக்கனூரில் வைத்து இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து உடலை அப்பகுதியில் வீசிவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. கைதான 3 பேரையும் போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்க உள்ளனர்.
Tags:    

Similar News