செய்திகள்
கைது

கவுண்டம்பாளையம் அருகே யானை தந்தம் கடத்திய மேலும் 2 பேர் கைது

Published On 2019-11-05 18:12 GMT   |   Update On 2019-11-05 18:12 GMT
கவுண்டம்பாளையம் அருகே யானை தந்தம் கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 2 பேரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை:

கோவை பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட தோலம்பாளையம் வனப்பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு யானை ஒன்று இறந்து கிடந்தது.

இதனை குஞ்சூர்பதியை சேர்ந்த கார்த்திக்குமார்(வயது 33) என்பவர் பார்த்து தனது நண்பரான பெருக்குபதியை சேர்ந்த ஈஸ்வரனிடம்(28) தெரிவித்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் காட்டுபகுதிக்குள் சென்று அங்கு இறந்து கிடந்த யானையின் 2 தந்தங்களையும் பிடுங்கி வனப்பகுதிக்குள் மறைத்து விட்டு சென்றர்.

பின்னர் ஈஸ்வரன் இதுபற்றி குஞ்சூர்பதியை சேர்ந்த போண்டா என்கிற வீரபத்திரனிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர் தந்தங்களை விற்பதற்காக கோவனூரை சேர்ந்த மானு என்கிற தாமோதரனை வரச் சொல்லி மறைத்து வைத்திருந்த தந்தங்களை காண்பித்தனர். பின்னர் அவரிடம் இந்த தந்தங்களை விற்று தருமாறு 3 பேரும் கூறினர். அவரும் தந்தங்களை விற்று தருவதாக கூறி அதனை தனது செல்போனில் படம் பிடித்து சென்றார்.

இந்த நிலையில் ஈஸ்வரன் தன்னிடம் 2 யானை தந்தங்கள் இருப்பதாகவும், அதனை விற்று தருமாறும் கேரளாவில் வேலை செய்து வரும் பில்லூர் டேம் கோரபதி பகுதியை சேர்ந்த தங்கராஜ்(34), மங்களாபுதூரை சேர்ந்த அண்ணாச்சி என்கிற மோகன் ராஜ்(46) ஆகியோரிடம் தெரிவித்தார்.

அதற்கு அவர்கள் தந்தங்களை எடுத்து கொண்டு வருமாறு கூறினர். இதையடுத்து ஈஸ்வரன், கார்த்திக்குமார் ஆகியோர் காட்டில் மறைத்து வைத்திருந்த யானை தந்தங்களை எடுத்து கொண்டு சீலியூர் கிராமத்திற்கு எடுத்து சென்று தங்கராஜ், மோகன்ராஜ் ஆகியோரிடம் காண்பித்தனர். இதையடுத்து யானை தந்தத்தை அந்த பகுதியில் மறைத்து வைத்துவிட்டு கணுவாய் பாளையத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். அப்போது தங்கராஜ் வெளியில் சென்று வருவதாக கூறி சென்றார்.

ஆனால் நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை. இதையடுத்து ஈஸ்வரன் உள்பட 3 பேரும் யானை தந்தம் மறைத்து வைத்த இடத்தை வந்து பார்த்தபோது அங்கு தந்தங்கள் இல்லை. தந்தங்களை தங்கராஜ் எடுத்து சென்றிருக்கலாம் என கருதினர்.

இதற்கிடையே முதலில் தந்தங்களை விற்பனை செய்து தருவதாக கூறிய மானு ஈஸ்வரன், வீரபத்திரனை தொடர்பு கொண்டு யானை தந்தங்களை கொண்டு வாருங்கள் விற்பனை செய்து தருகிறேன் என்றார்.

அதற்கு யானை தந்தங்கள் களவு போய்விட்டதாக கூறினர். ஆனால் அவர்கள் தந்தங்களை விற்று விட்டு தனக்கு பணம் தர மறுப்பதாக நினைத்த மானு என்கிற தாமோதரன் ஆட்களை வைத்து அடித்தார். இந்த சம்பவம் நடந்து 1½ வருடங்கள் கழித்து பெருக்குபதி மற்றும் குஞ்சூர்பதி மக்களுக்கு தெரியவந்தது.

இதுகுறித்து கோவை உதவி வன பாதுகாவலர், பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகர் மற்றும் பணியாளர் விசாரணை நடத்தி கார்த்திக்குமார், வீரபத்திரன் ஆகியோரை முதலில் கைது செய்தனர். பின்னர் கள்ளச்சாராய வழக்கில் சிறையில் இருந்த மானு என்கிற தாமோதரனையும் கைது செய்தனர்.

மேலும் தலைமறைவான ஈஸ்வரன், மோகன்ராஜ், தங்கராஜ் ஆகியோரை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி ஈஸ்வரன் மதுக்கரை கோர்ட்டில் சரணடைந்தார். இதையடுத்து போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்தனர்,

யானை தந்தம் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவான 2 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த மோகன்ராஜ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தந்தங்களை மோகன்ராஜ் தான் எடுத்து சென்று கேரளாவில் விற்க முயன்றதாகவும், ஆனால் யாரும் வாங்காததால் அதனை அவரது வீட்டில் வைத்திருப்பதாகவும் கூறினார். இதையடுத்து போலீசார் கேரளா மாநிலம் கொச்சிக்கு சென்று அங்கு தங்கி இருந்த தங்கராஜை கைது செய்தனர். மேலும் அவர் கிணற்றுக்குள் மறைத்து வைத்திருந்த தந்தங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் மோகன்ராஜ், தங்கராஜ் ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 2 யானை தந்தங்களும் 2 அடி நீளமும், 5 கிலோ எடை கொண்டதாகும்.

Tags:    

Similar News