செய்திகள்
டாஸ்மாக் கடை

தேர்தல் முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி வழக்கு - ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

Published On 2021-03-19 23:08 GMT   |   Update On 2021-03-19 23:08 GMT
கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதால், தேர்தல் முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் நேற்று வழக்குகளை விசாரித்தனர். அப்போது வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம் ஆஜராகி, ‘தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும். லட்சக்கணக்கான மக்கள் தினமும் டாஸ்மாக் கடைகளுக்கும், பார்களுக்கும் வருவதால் வைரஸ் தொற்று பரவும் இடங்களாக அவை திகழ்ந்து வருகின்றன. இது தொடர்பாக நான் தாக்கல் செய்ய உள்ள வழக்கை அவசர வழக்காக உடனே விசாரிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்

அதற்கு நீதிபதிகள், மனு தாக்கல் செய்தால், விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறோம் என்று கூறினர்.

இதையடுத்து சூரியபிரகாசம் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்கள் எந்த ஒரு நிர்ப்பந்தமும் இல்லாமல், தெளிவான மனநிலையில் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு பல தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளது. தேர்தலில் தமக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக வாக்காளர்களை காசு கொடுத்து வாங்க பணபலம் உள்ள வேட்பாளர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்கின்றனர். தேர்தல் நேரத்தில் இவ்வாறு கிடைக்கும் பணத்தை பலர் டாஸ்மாக் கடைகளில்தான் செலவு செய்கின்றனர். டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதுவதால், கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.

அதனால், வருகிற 22-ந் தேதி முதல் ஏப்ரல் 6-ந் தேதி வரை டாஸ்மாக் கடைகளையும், பார்களையும் இழுத்து மூடவேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடந்த 7-ந் தேதி மனு அனுப்பியும் பரிசீலிக்கவில்லை. அதனால், என் மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Tags:    

Similar News