செய்திகள்

சாம்பல் கழிவால் மீனவர்களுக்கு ஆபத்து: கனிமொழி எம்.பி.

Published On 2017-11-27 06:38 GMT   |   Update On 2017-11-27 06:39 GMT
சாம்பல் கழிவால் கடல்நீர் மாசு அடைந்து மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது என கனிமொழி கூறியுள்ளார்.
பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தில் சேகரிக்கப்படும் சாம்பல் கழிவுகள் பைப் மூலம் செப்பாக்கம் கிராமத்தில் உள்ள காலி இடத்தில் கொட்டப்படுகிறது.

இங்கு கொட்டப்படும் சாம்பல் கழிவுகளால் அப்பகுதி மக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் மழைநீர் பெருக்கெடுத்து வரும் போது சாம்பல் கழிவுகள் பக்கிங்காம் கால்வாய் வழியாகவும் கொசஸ்தலை ஆற்றில் கலந்தும் எண்ணூர் கழிமுகப்பகுதியில் கடலில் கலக்கிறது. இதனால் எண்ணூர் கழிமுகப்பகுதி சாம்பல் கழிவுகளால் மாசு அடைந்து காணப்படுகிறது.

இந்த நிலையில் செப்பாக்கம் கிராமத்தில் சாம்பல் கழிவு கொட்டப்படும் இடத்தை தி.மு.க. எம்.பி. கனிமொழி இன்று பார்வையிட்டார். அப்போது பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அவரிடம் பொது மக்கள் கூறும் போது, வடசென்னை அனல் மின் நிலையத்தில் வேலைவாய்ப்பு தருவதாக கூறி சாம்பல் கழிவுகள் கொட்டும் இடத்தை வாங்கினர். இதுவரை வேலை வாய்ப்பு இல்லை.

சாலைவசதி, பள்ளிக்கூட வசதி இல்லை. சாம்பல் கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டினர்.

பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-


செம்பாக்கம் பகுதி சாம்பல் கழிவுகளால் மூடப்பட்டு உள்ளது. இதனால் பொது மக்கள் ஏராளமானோர் வெளியேறி வருகிறார்கள். சாம்பல் கழிவால் கடல்நீர் மாசு அடைந்து மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கும் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது.

கொசஸ்தலை ஆற்றின் நீர் வடியும் பகுதியான எண்ணூர் முகத்துவார பகுதி சாம்பல் கழிவு மற்றும் மணல் மேடுகளால் மூடி காணப்படுகிறது.

எண்ணூர் துறைமுக விரிவாக்கப் பணிக்காக முகத்துவார பகுதியில் மணல்கள் கொட்டப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்ட முயற்சிகள் நடக்கிறது.

இதுபோன்று நடைபெற்றால் பெருவெள்ளம் காலத்தில் தண்ணீர் வடிய முடியாமல் வடசென்னை மூழ்கும் ஆபத்து உள்ளது.

இதுபற்றி தி.மு.க. சார்பில் ஏற்கனவே பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பி உள்ளேன். ஆனால் அமைச்சர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் முன்பு இந்த இடத்தை மீண்டும் பார்வையிட்டு பிரச்சனைகள் பற்றிய அறிய வந்துள்ளேன். எண்ணூர் துறைமுக விரிவாக்கப் பணியால் ஆபத்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி. செப்பாக்கத்தில் உள்ள நிலக்கரி குடோன், எண்ணூர் கழிமுக பகுதியை பார்வையிட்டார். அப்போது அவருடன் சமூக ஆர்வலர் நித்யானந்த ஜெயராமன் உடன் இருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு எண்ணூர் கழிமுகப் பகுதியை நடிகர் கமல்ஹாசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News