செய்திகள்
வால்பாறை சோலையார் எஸ்டேட்டில் உள்ள பிர்லா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருவதை காணலாம்

கோவை, நீலகிரியில் மழை நீடிப்பு- கூடலூரில் மண் சரிவு

Published On 2021-07-16 07:41 GMT   |   Update On 2021-07-16 07:41 GMT
தொடர்ந்து மழை பெய்து வருவதால் சோலையார் அணை உள்பட அனைத்து அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
வால்பாறை:

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாகவே பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் ஆறுகள், சிற்றோடைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. இதனால் குந்தா, கெத்தை, எமரால்டு, அவலாஞ்சி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலையில் இருந்தே பலத்த மழை பெய்தது. மழைக்கு கேரிங்டன் அருகே சாலையோரம் நின்றிருந்த ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து ரோட்டின் குறுக்கே விழுந்தது. இதனால் மஞ்சூர்- கிண்ணக்கொரை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மஞ்சூர், கிண்ணக்கொரை, இரியசீகை பகுதிகளில் சென்ற அரசு பஸ்கள் தனியார் வாகனங்கள் ஆங்காங்கே சாலைகளில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உருவானது.

தகவலறிந்த நெடுஞ்சாலைதுறை சாலை ஆய்வாளர் நஞ்சூண்டன் மற்றும் சாலைப்பணியாளர்கள் விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றினர். இந்த சம்பவத்தால் மஞ்சூர்- கிண்ணக்கொரை இடையே சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை முதல் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது. நேற்றும் தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழைக்கு தேவாலாவில் இருந்து கரியசோலை செல்லும் சாலையில் வாழவயல் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் மற்ற வழியாக திருப்பி விடப்பட்டன. தொடர் மழையால் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆறுகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பொன்னானி, பாட்டவயல் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாலை பொன்னானி-பாட்டவயல் சாலையில் வழக்கம்போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்தது. இந்த லாரி பொன்னானி-பாட்டவயல் சாலையில் உள்ள வளைவில் திரும்ப முடியாமல் சிக்கி கொண்டது.

இதனால் அங்கு சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பிதர்காடு, குந்தாலாடி, பொன்னானி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பஸ் இயக்கப்படாததால் ஆட்டோக்களில் பயணித்தனர். இந்த சாலையில் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால் கனரக வாகனங்கள் வர தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையிலும் இரவு, பகல் முழுவதும் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று காலை வால்பாறை நகரில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. மாலையில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

இந்த மழை காரணமாக வால்பாறையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை சுற்றி தண்ணீர் சூழ்ந்தது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் சோலையார் அணை உள்பட அனைத்து அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. சோலையார் அணையில் நேற்றைய நிலவரப்படி 128 அடி தண்ணீர் இருந்தது.

இன்று காலை நிலவரப்படி 160 அடி கொண்ட சோலையார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 133 அடியாக உள்ளது. அணையில் இருந்து சோலையாறு மின்நிலையம்-1 மூலமாக 404 அடி தண்ணீரும், சோலையாறு மின்நிலையம்-2 432 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தொடர்மழையால் வால்பாறையில் உள்ள நடுமலையாறு, சோலையார் ஆறு, கூழாங்கல் உள்ளிட்ட ஆறுகளில் இன்று 6-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மழைக்கு அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் உள்ள நடைபாதை உடைந்து விழுந்ததால், அதனை பயன்படுத்திய மக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். இதே போல் சோலையார் அணைக்கு செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு, பாறைகளும், மரக்கிளைகளும் சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, நெகமம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளிலும் நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரை விட்டு, விட்டு மழை பெய்தது. கோட்டூர் ரோடு, மீன்கரை ரோடு ரெயில்வே பாலங்களுக்கு கீழ் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியிலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

நீலகிரி, கோவை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

வால்பாறை பி.ஏ.பி-92, வால்பாறை தாலுகா-92, சின்கோனா-65, சின்னக்கல்லார்-88, சோலையார்-43.


Tags:    

Similar News