உள்ளூர் செய்திகள்
கூத்தாண்டவர் கோவில் திருவிழா

நாளை சித்ரா பவுர்ணமி விழா- கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் குவிந்த திருநங்கைகள்

Published On 2022-04-15 07:32 GMT   |   Update On 2022-04-15 07:32 GMT
நாளை கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து வரும் 19-ந்தேதி இரவு 7 மணிக்கு சுவாமி திருக்கண் திறந்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
திருநாவலூர்:

இந்தியாவிலுள்ள திருநங்கைகள் மத்தியில் புகழ்பெற்ற புண்ணியத்தலமாக விளங்கக் கூடியது கூத்தாண்டவர் கோவில். தமிழகத்தில், விழுப்புரம் மாவட்டம், மடப்புரம் அருகே கூவாகம் கிராமத்தில் திருநங்கைகளுக்கான தனி தெய்வமாகிய கூத்தாண்டவர் கோவில் அமைந்துள்ளது.

மகாபாரத கதையில் அர்ச்சுனனால் கவரப்பட்டு குழந்தை வரம் பெற்ற வேடுவப் பெண்ணான நாகக்கன்னியின் மகன் அரவான். குருஷேத்திர யுத்தத்தில் பாண்டவர் பக்கம் வெற்றி கிடைக்க “எந்த குற்றமும் இல்லாத சகல லட்சணமும் பொருந்திய ஒரு மனிதப்பலி தங்கள் தரப்பில் முதல் பலியாக வேண்டும்” என ஆருடம் கூறுகிறது. பாண்டவர் தரப்பில் இவ்வாறு சாமுத்திரிகா லட்சணம் பொருந்திய ர்களாக இருப்பவர்கள் அர்ஜுனன், அவன் மகன் அரவான், ஸ்ரீகிருஷ்ணர்.

அர்ஜுனனும், கிருஷ்ணரும் தான் இந்த போருக்கு முக்கியமானவர்கள் என்பதால் அரவானைப் பலியாக்க முடிவு செய்து இருவரும் அவனை அணுகுகின்றனர். அரவான் பலிக்கு சம்மதித்தாலும், அவனுக்கான இறுதி ஆசையாக ஒரு பெண்ணுடன் ஒரு நாள் இல்லற வாழ்வை முடித்த பின்பே தான் பலிக்களம் புகுவேன் என சொல்கிறான். வேந்தர் குலம் முதல் வேடுவர் குலம் வரை எந்தப் பெண்ணும் இதை ஏற்க முன்வரவில்லை.

இறுதியாக ஸ்ரீகிருஷ்ணரே மோகினி அவதாரமெடுத்து அரவானை மணக்கிறார். ஒரு நாள் இல்லற வாழ்விற்குப் பின் பலிக்களம் புகுகிறான் அரவான். விதவைக் கோலம் பூணுகிறாள் மோகினி. இந்த கதையின் அடிப்படையில் மோகினியாய் தம்மை உணரும் அரவாணிகள் கூடி வரும் நிகழ்வாகக் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா உள்ளது.

இத்தகைய புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியது. விழாவில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள் கஞ்சி கலயங்களை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு படையலிட்டு மாவிளக்கு ஏற்றியும் வழிபட்டனர். நாளை கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து வரும் 19-ந் தேதி இரவு 7 மணிக்கு சுவாமி திருக்கண் திறந்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அப்பொழுது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் திருநங்கைகள் பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டு அரவாணை கணவனாக ஏற்று அன்று இரவு முழுவதும் ஆடி பாடி மகிழ்வார்கள்.

மறுநாள் 20-ந் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டம் தொடங்கி பந்தலடி சென்று அங்கு அழுகளம் நிகழ்ச்சியில் திருநங்கைகள் தங்கள் அணிந்திருந்த தாலியை அறுத்து வளையல்களை உடைத்து ஒப்பாரி வைத்து விதவை கோலம் பூண்டு சொந்த ஊருக்கு செல்வார்கள்.

21-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் சித்திரை பெருவிழா நிறைவடைகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழா பெருவிழா விமரிசையாக நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

இந்நிலையில் விழாவுக்கு வரும் தங்களுக்கு தங்கும் வசதி, கழிப்பிட வசதி, பாதுகாப்பு இல்லாமல் தொடர்கதையாக உள்ளது என்று அரவாணிகள் கூறுகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் இந்த கோரிக்கையை ஏற்று எங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று அரவாணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News