செய்திகள்
கொரோனா பரிசோதனை

பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை

Published On 2021-09-18 03:35 GMT   |   Update On 2021-09-18 03:35 GMT
கோவை மாநகராட்சி பகுதியில் தற்போது ஒரு நாளைக்கு சராசரியாக 6 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
கோவை:

கோவையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இங்கு பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் படித்து வருகின்றனர். எனவே வெளிமாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள் 1 வாரத்திற்கு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை மாநகராட்சி பகுதியில் ஏராளமான கல்வி நிலையங்கள் உள்ளன. எனவே மாணவ-மாணவிகளை கண்காணிக்க அந்தந்த பகுதி சுகாதார ஆய்வாளர் தலைமையில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இவர்கள் ஒவ்வொரு கல்வி நிலையத்திற்கும் சென்று மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வார்கள். இதன்படி மாநகரில் தினமும் 700 மாணவ- மாணவிகளுக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

மேலும் சுகாதார உதவி ஆய்வாளர்கள் அந்தந்த பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு நேரிடையாக சென்று புதிதாக மாணவ-மாணவிகள் வந்துள்ளனரா?, பிற மாநிலங்களை சேர்ந்த மாணவர்களின் வருகை, 18 வயது பூர்த்தியான மாணவர்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளனரா? வெளி மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள் கொரோனா பரிசோதனை செய்து உள்ளார்கள? அவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனரா என்பது குறித்து கண்காணிப்பார்கள்.

மேலும் ஏதாவது ஒரு பள்ளி அல்லது கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால் அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள். தற்போது மாநகராட்சி பகுதியில் ஒரு நாளைக்கு சராசரியாக 6 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் 70 முதல் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News