செய்திகள்
தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ்

பள்ளிகளை கிருமிநாசினி தெளித்து தூய்மையாக வைக்க கலெக்டர் அறிவுரை

Published On 2021-01-15 10:13 GMT   |   Update On 2021-01-15 10:13 GMT
தஞ்சை மாவட்டத்தில் 19-ந்தேதி 438 பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகளில் கிருமிநாசினி தெளித்து தூய்மையாக வைத்துக்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட அலுவலக கூட்ட அரங்கில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 10, 12-ம் வகுப்பு பள்ளி திறக்கப்படுவதையொட்டி மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கோவிந்தராவ் தலைமை தாங்கி பேசியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் திறக்கப்பட உள்ளது. அரசின் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அனைத்து பள்ளிகளும் முறையாக கடைபிடிக்க வேண்டும். பள்ளி திறக்கப்படும் போது ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகையில்லாமல் செயல்பட அறிவுறுத்த வேண்டும்.

பள்ளிக்கு வந்த பின் மாணவர்களுக்கு ஏதேனும் உடல் குறைபாடுகள் இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி வைக்க தேவையான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிக், சி.பி.எஸ்.சி., சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 438 உள்ளன. இதில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 35 ஆயிரத்து 132 பேரும், 12-ம் வகுப்பு படிக்கும் 29 ஆயிரத்து 488 மாணவ, மாணவிகளும் படித்து வருகிறார்கள்.

எனவே பள்ளிகளை தூய்மையாக வைத்திருக்க, உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக கிருமிநாசினி தெளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். குடிநீர் தொட்டிகளை முறையாக சுத்தப்படுத்தி தயார் நிலையில் வைக்க வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரத்துறையின் மூலம் வைட்டமின் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்படுவது உறுதி செய்திட வேண்டும். அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் முறையாக அரசின் வழிமுறைகளை கடைபிடித்து மாணவ, மாணவிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் முதன்மைக்கல்வி அதிகாரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News