செய்திகள்
கைது

சேலம் கருப்பூர் டோல்கேட்டில் 2 ஆயிரத்து 133 மது பாட்டில்கள் பறிமுதல்- 4 பேர் கைது

Published On 2021-06-09 09:51 GMT   |   Update On 2021-06-09 09:51 GMT
சேலம் கருப்பூர் டோல்கேட்டில் 2 ஆயிரத்து 133 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால் கர்நாடகாவில் இருந்து அதிக அளவில் மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து கருப்பூர் சோதனை சாவடியில் அனைத்து வாகனங்களையும் போலீசார் தீவிர சோதனை செய்து வருகிறார்கள்.

அதன்படி இன்று அதிகாலை 3.30 மணியளவில் வேகமாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ரூ.2 லட்சம் மதிப்பிலான 1399 மது பாட்டில்களை பெங்களூரில் இருந்து வாங்கி திண்டுக்கல்லுக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அந்த மது பாட்டில்கள் மற்றும் அதனை கொண்டு வந்த காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் வாகனத்தை ஓட்டி வந்த ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளியை சேர்ந்த மணி, சுப்ரதீபன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

இதே போல இன்று அதிகாலை 4 மணியளவில் அதிவேகமாக வந்த மினி சரக்கு வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான 734 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வாகனத்தில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்திய போது தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அந்த மது பாட்டில்களை வாங்கி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து காருடன் அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியை சேர்ந்த டிரைவர் முத்துவேல் (வயது 35) மற்றும் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த ரமேஷ் (46) ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

Similar News