செய்திகள்
கோப்புபடம்

வியாசர்பாடியில் திருமண மண்டபத்தில் தீ விபத்து - உறவினர்கள் சாலை மறியல்

Published On 2021-09-18 07:14 GMT   |   Update On 2021-09-18 07:14 GMT
வியாசர்பாடியில் திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு மின் கசிவே காரணம் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னை:

சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் விஜய். இவருக்கும் கொருக்குபேட்டையை சேர்ந்த ஹேமமாலினிக்கும் நேற்று காலை கீழ்பாக்கத்தில் உள்ள கோவிலில் திருமணம் நடந்தது.

நேற்று மாலை வியாசர்பாடி, எருக்கஞ்சேரியில் உள்ள ஓரு தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் சுமார் 400 உறவினர்கள், நண்பர்களும் கூடியிருந்தனர்.

இரவு 8 மணி அளவில் மின்சார கோளாறால் தீ விபத்து ஏற்பட்டது. பட்டாசு போல மின் சாதனங்கள் வெடித்து சிதறின.

இதனால் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அலறி அடித்து மண்டபத்தை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர்.

இந்த தீ விபத்தில் ஒருவர் சிக்கி காயம் அடைந்தார். இதை பார்த்த மணமகள் மற்றும் மணமகளின் தாயார் மயங்கி விழுந்தனர். இவர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது பற்றி மண்டபத்தின் உரிமையாளரிடம் கேட்டதற்கு அலட்சியமாக பதில் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த திருமண வீட்டார் மண்டபத்தின் உரிமையாளரை கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சப்- இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையிலான போலீசார் கூட்டத்தினரை கலைந்து செல்லுமாறு கூறினர்.

அதை ஏற்காத திருமண கோஷ்டினர் தொடர்ந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும் திருமண கோஷ்டியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் மணமகனின் தந்தைக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் கூட்டத்தினர் கலைந்து சென்றனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தீ விபத்துக்கு மின் கசிவே காரணம் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News