செய்திகள்
கட்டுமான பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய நிர்வாக இயக்குனர் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர் உத்தரவு

Published On 2020-11-30 06:29 GMT   |   Update On 2020-11-30 06:29 GMT
குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டபணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டார்.
கோவை:

கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளில் உள்ள 87 முதல் 100-வது வார்டு வரையுள்ள பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் ரூ.591.14 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேற்பார்வையில் தனியார் நிறுவனத்தினர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர் சி.என்.மகேஷ்வரன் நேற்று கோவை வந்தார்.

அவர் குனியமுத்தூர் பகுதி குறிச்சிநகரில் உள்ள சின்ன சுடுகாடு என்ற இடத்தில் அமைக்கப்பட்டு வரும் பிரதான கழிவுநீரகற்று நிலைய கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், பி.கே. புதூர் சுகுணாபுரம் கிழக்கு, குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு பணிகளை செய்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்பின்னர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர் சி.என்.மகேஷ்வரன் கூறியதாவது:-

பாதாள சாக்கடை திட்ட பணிகளில் இதுவரை 56 சதவீதம் முடிவடைந்து உள்ளது. வீடுகளில் வெளியேறும் கழிவுநீர் பாதாள சாக்கடை குழாய்கள் மூலம் கழிவு நீரேற்று நிலையத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. இதற்காக குனியமுத்தூர் பகுதியில் 16 நீரேற்று நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. அதன்பின்னர் அவை சின்னசுடுகாடு என்ற இடத்தில் அமைக்கப்படும் பிரதான கழிவுநீரகற்று நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது.

இதில் சிறப்பு அம்சமாக அனைத்து கழிவுநீரேற்று நிலையங்களிலும் துர்நாற்றம் அகற்றும் கருவி முதன்முறையாக பொருத்தப்படுகிறது. மேலும் பணிகள் நடைபெறும் சாலை பகுதிகளை சீரமைத்து இயல்பு நிலைக்கு கொண்டு வரும்படி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தி உள்ளார். அதன்படி மழையால் தாமதமான சாலை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த பணிகள் 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் வி.ரகுபதி, நிர்வாக பொறியாளர் ஜே.கே.அண்ணாதுரை மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News