ஆன்மிகம்
சபரிமலை சன்னிதானத்தில் ஐயப்பசாமியை தரிசனம் செய்த பக்தர்களை படத்தில் காணலாம்.

நடை திறக்கப்பட்ட 2-வது நாளில் சபரிமலையில் 15 ஆயிரம் பேர் தரிசனம்

Published On 2021-09-18 04:46 GMT   |   Update On 2021-09-18 04:46 GMT
சபரிமலையில் ஐயப்பசாமியை தரிசனம் செய்ய கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஐயப்ப பக்தர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
திருவனந்தபுரம் :

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அன்றைய தினம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து அய்யப்ப பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இரு முடிகட்டுகளுடன் 18-ம் படி வழியாக ஏறி வந்து 15 ஆயிரம் பக்தர்கள் ஐயப்பசாமியை தரிசனம் செய்தனர். நேற்று வழக்கமான பூஜை வழிபாடுகளுடன் களபாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் களப கலச ஊர்வலம் நடந்தது. 21-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.

கொரோனா பரவல் காரணமாக மாத பூஜையின் போது தற்போது தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகிறார்கள். தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோர் 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.

எனவே சபரிமலையில் ஐயப்பசாமியை தரிசனம் செய்ய கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஐயப்ப பக்தர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
Tags:    

Similar News