செய்திகள்
வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்

திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூரில் 2-வது நாளாக கனமழை நீடிப்பு

Published On 2021-11-26 04:24 GMT   |   Update On 2021-11-26 04:24 GMT
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா பச்சமலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் துறையூரில் உள்ள 285 ஏக்கர் பெரிய ஏரி நள்ளிரவில் நிரம்பி கடை நீர் வழிந்தது.
திருச்சி:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறக்கூடும் என்பதால் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி நேற்று காலை முதல் கடலோரம் மற்றும் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்குகிறது.

திருச்சி மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய, விடிய நீடித்தது. காலையிலும் சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கனமழை காரணமாக நேற்று கலெக்டர் சிவராசு இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்தார். ஆனால் இடைவிடாமல் மழை நீடித்ததால் இன்று கல்லூரிகளுக்கும் சேர்த்து விடுமுறை அறிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பெய்த மழையில் அதிகபட்சமாக திருச்சி மாநகரில் திருச்சி டவுன், திருச்சி ஜங்சன், ஏர்போர்ட் மற்றும் பொன்மலை பகுதிகளில் 206.5 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் மாநகரில் எங்கு பார்த்தாலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய வண்ணம் உள்ளது. மீண்டும் கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. மாவட்டத்தின் இதர பகுதிகளில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

லால்குடி-51.80, நந்தியாறு அணைக்கட்டு-66.20, புள்ளம் பாடி-57.80, தேவிமங்கலம்-16.40, சமயபுரம்-37.40, சிறுகுடி-20, வாத்தலை அணைக்கட்டு-31, மணப்பாறை-57.40, பொன்னணியாறு அணை-45.80, கோவில்பட்டி-54.20, மருங்காபுரி-75.40, முசிறி- 15, புலிவலம்-32, தா.பேட்டை- 34, நவலூர் கொட்டப்பட்டு- 60.60, துவாக்குடி-57, கொட்டம்பட்டி-42, தென்பறநாடு- 49, துறையூர்-46.

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா பச்சமலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் துறையூரில் உள்ள 285 ஏக்கர் பெரிய ஏரி நள்ளிரவில் நிரம்பி கடை நீர் வழிந்தது.

கடந்த 2005-ம் ஆண்டுக்கு பிறகு இப்போது ஏரி நிரம்பியதால், அப்பகுதி மக்கள் நள்ளிரவிலும் கடைக்கால் வழியும் செச்சை முனீஸ்வரர் கோவிலில் கூடி வழிபாடு செய்து, பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.

இதற்கிடையில் செல்லிபாளையம், சிக்கத்தம்பூர், கீரம்பூர் பகுதி ஏரிகள் ஏற்கனவே நிரம்பி இருந்த நிலையில், நேற்று பெய்த மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது. மேலும் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் அப்பகுதி முழுவதும் துண்டிக்கப்பட்டது. வெள்ளநீர் மற்றும் மின்சாரம் துண்டிப்பு ஆகியவற்றால் அப்பகுதி மக்கள் வீதிகளில் தவிக்கின்றனர்.

இதேபோல் பச்சை மலையிலிருந்து வரும் வெள்ள நீர், சிக்கத்தம்பூரை அடுத்துள்ள சேர்வைக்காரன்பட்யிலுள்ள குட்டைக்கு வரும் வடிகால் மழைநீர் பெருக்கெடுத்ததால், சிக்கத்தம்பூரில் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. வெள்ள நீர் வீட்டிற்குள் இரண்டடி அளவிற்கு சென்றதால், பொதுமக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகினர்.

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பச்சைமலையில் பலத்த மழை காரணமாக நேற்றிரவு உப்பிலியபுரத்திலிருந்து சோபனபுரம் வழியாக டாப் செங்காட்டுப்பட்டி செல்லும் வனத்துறையினருக்கு சொந்தமான பிரதான சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால் சோபனபுரத்திலிருந்து டாப் செங்காட்டுப்பட்டி செல்லும் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. துறையூர் வனச்சரகர் பொன்னுசாமி தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். சோபனபுரத்திலிருந்து டாப் செங்காட்டுப்பட்டி செல்லும் 14 கி.மீ. சாலை மிகவும் சேதமடைந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை, ஆலங்குடி, திருமயம், கந்தர்வகோட்டை, அறந்தாங்கி, கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம், மீமிசல், ஆவுடையார்கோவில், விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய பலத்த மழை இன்றும் தொடர்கிறது.

இந்த மழையால் புதுக்கோட்டை நகர் பகுதியில் ஆங்காங்கே குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள்.

மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 1,049 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திருமயத்தில் 140.50 மி.மீ., ஆவுடையார்கோவிலில் 129 மி.மீ., அறந்தாங்கியில் 127 மி.மீ. இலுப்பூரில் 124.20 மி.மீ., பொன்னமராவதியில் 92.40 மி.மீ. பெய்துள்ளது.

பலத்த மழைக்கு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. குடிசை வீடுகள் 3, ஓட்டு வீடுகள் 7 சேதமடைந்துள்ளன. 6 மாடுகள், 8 ஆடுகள் உயிரிழந்துள்ளன. தொடர் மழையால் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

ஆலங்குடி அருகே உள்ள குளமங்கலம் தெற்கு ஊராட்சியை சேர்ந்தவர்கள் செல்லத்துரை-கருப்பாயி தம்பதியினர் பழைய வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் திடீரென ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. அந்த மழையின்போது செல்லத்துரையின் வீட்டின் ஒரு பகுதி முழுவதுமாக சேதமடைந்து இடிந்தது. இதனால் தங்குவதற்கும், உணவிற்கும் கூட வழியில்லாத நிலைக்கு தம்பதியினர் தள்ளப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பெரம்பலூர் வட்டம் லாடபுரம் கிராமத்தில் பொக்கினி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து ஊருக்குள் நீர் புகுந்தது. பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அதே போல் கீழக்கரை கிராமத்தில் இரட்டை மலைச்சந்து ஊராட்சி தொடக்கப்பள்ளியிலும், வடக்கு மாதவி கிராம மக்கள் அங்குள்ள அங்கன்வாடி மையத்திலும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

சிறுகன்பூர் ஊராட்சியில் தெற்கு மாதவி செல்லும் சாலையில் மருதை ஆறு நீர்வரத்து அதிகரித்ததால் பாதிக்கப்பட்டுள்ளது. எலந்தலப்பட்டி ஊராட்சி அடைக்கம்பட்டி கிராமத்தில் உள்ள பெரிய ஏரி 16 வருடத்திற்கு பிறகு இன்று முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

கொட்டரை மருதையாறு நீர்த்தேக்க நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரம்பலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பெய்த மழையினால் கொட்டரை நீர்த்தேகத்திற்கு உள்வாயில் மற்றும் உபரிநீர் போக்கியில் 3500 கனஅடி வரை தண்ணீர் வெளியேறிக்கொண்டிருப்பதால் ஆற்றின் இருகரைகளிலும் மக்கள் ஆற்றின் அருகிலோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம், செந்துறை, ஜெயங்கொண்டம், தா.பழூர், திருமானூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதையடுத்து இன்று மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செந்துறை பெரிய ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக உபரி நீர் வெளியேறி வருகிறது. குவாரி தொழில் அதிக அளவில் நடைபெறுவதால் ஆங்காங்கே தோண்டப்பட்ட குழிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. அத்துடன் கனரக வாகன போக்குவரத்து அதிகம் உள்ளதால் சாலைகள் மிகவும் சேதமடைந்துள்ளன.
Tags:    

Similar News