செய்திகள்
கோப்புப்படம்

புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு பாரம்பரிய குழு ஒப்புதல் - மத்திய அரசு தகவல்

Published On 2021-01-11 22:48 GMT   |   Update On 2021-01-11 22:48 GMT
14 உறுப்பினர்களை கொண்ட பாரம்பரியக் குழு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்ட ஒப்புதல் வழங்கி உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் ரூ.971 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட உள்ளது.

இதற்காக பிரதமர் மோடி கடந்த மாதம் அடிக்கல் நாட்டினார். எனினும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இதனால் கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் இருந்தன.

இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது.

எனினும் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாக பாரம்பரியக் குழு மற்றும் பிற அதிகாரிகளிடம் உரிய ஒப்புதலை பெற வேண்டுமென மத்திய அரசை சுப்ரீம் கோர்ட்டு வலியுறுத்தியது.

இந்த நிலையில் 14 உறுப்பினர்களை கொண்ட பாரம்பரியக் குழு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்ட ஒப்புதல் வழங்கி உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர நலத் துறை அமைச்சகத்தின் செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா கூறுகையில், “அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் தலைமையில் பாரம்பரியக் குழு இந்த திட்டத்தை ஆராய்ந்து விவாதித்த பின்னர் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. குடியரசு தின அணிவகுப்புக்கு பிறகு நாடாளுமன்ற கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும். அடுத்த 10 மாதங்களில் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது” என கூறினார்.
Tags:    

Similar News