ஆன்மிகம்
சபரிமலை ஐயப்பன் கோவில்

தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

Published On 2020-11-03 03:30 GMT   |   Update On 2020-11-03 03:30 GMT
கொரோனா தொற்று காரணமாக சபரிமலை செல்ல 60 முதல் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை :

கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் தமிழக அய்யப்ப பக்தர்கள் கேரள காவல் துறையின் மெய்நிகர் இணைய வழி தரிசன வரிசையில் ( https://sabarimalaonline.org ) பதிவு செய்ய வேண்டும். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் வார நாட்களில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் பக்தர்களுக்கும், வார இறுதி நாட்களில் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் பக்தர்களுக்கும் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படும்.

சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், தரிசனத்திற்கு முந்தைய 48 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொற்று இல்லை என்று கொரோனா எதிர்மறை சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். சுயவிருப்பத்தின் பேரில் கட்டணத்தின் அடிப்படையில் நோய் எதிர்ப்பு சக்தி சோதனையை பக்தர்கள் பரிசோதனை செய்து கொள்ள நுழைவு இடங்களில் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். அந்த ஏற்பாட்டை பயன்படுத்திக்கொள்ளலாம்.

பத்து வயதுக்கு குறைவான மற்றும் 60 முதல் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்களுக்கு தரிசனத்திற்கான அனுமதி இல்லை. நோயால் உடல் நலம் குன்றிய பக்தர்களும் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள தடை செய்யப்பட்டு உள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான அடையாள அட்டை, ஆயுஸ்மான் பாரத் அடையாள அட்டை போன்றவற்றை வைத்துள்ளவர்கள் யாத்திரை பயணத்தின்போது அவற்றினை உடன் கொண்டு வருதல் வேண்டும்.

நெய் அபிஷேகம், பம்பை ஆற்றில் நீராடல் மற்றும் இரவு நேரங்களில் சன்னிதானம், பம்பை மற்றும் கணபதி கோவில் ஆகிய இடங்களில் தங்குவதற்கு அனுமதி இல்லை. எருமேலி மற்றும் வடசேரிக்கரை வழியாக மட்டுமே பக்தர்கள் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட தகவலை இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News