செய்திகள்
கைது

குடிபோதையில் நண்பரை குத்திக்கொன்ற வாலிபர் கைது

Published On 2021-01-12 10:45 GMT   |   Update On 2021-01-12 10:45 GMT
கோழிக்கோடு அருகே குடிபோதையில் நண்பரை குத்திக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோழிக்கோடு:

கோழிக்கோடு மாவட்டம் பந்திரங்காவு பகுதியை சேர்ந்தவர் மோகன். இவருடைய மனைவி கீதா. இவர்களது மகன் விபின்(வயது 36). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். மேலும் பந்திரங்காவு அருகில் உள்ள ஜோதிலால் குளக்கரை ரோடு பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது வீட்டுக்கு, நண்பர்கள் வந்து செல்வது வழக்கம்.

அதன்படி கடந்த 3 நாட்களுக்கு முன்பு நண்பரான மஜீத்(34) என்பவர், விபினின் வீட்டுக்கு வந்தார். பின்னர் 2 பேரும் சேர்ந்து, ஒன்றாக மது குடித்தனர்

அப்போது மஜீத்தின் சட்டைப்பையில் வைத்திருந்த 500 ரூபாயை காணவில்லை. வீட்டில் வேறு யாரும் இல்லாததால், அந்த பணத்தை விபின் எடுத்து இருக்கலாம் என்று அவர் நினைத்தார். பின்னர் அவரிடம் பணம் காணாமல் போனது குறித்து கேட்டார். உடனே கோபமான விபின், அந்த பணத்தை நான் எடுக்கவில்லை என்றும், 500 ரூபாய்க்காக என் மீது சந்தேகப்பட்டுவிட்டாயே என்றும் கூறி மஜித்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், அது குடிபோதையில் தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த மஜித், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து விபினை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த விபின், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்து மஜித் தப்பி ஓடிவிட்டார்.

முன்னதாக விபினின் அலறல் சத்தம் கேட்டு சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், சிறிது நேரம் கழித்து வீட்டுக்குள் வந்து பார்த்தனர். அப்போது அவர் கத்தியால் குத்தப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவரை மீட்டு கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி விபின் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பந்திரங்காவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

அப்போது அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, விபினை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு மஜித் தப்பி ஓடுவது பதிவாகி இருந்தது. உடனே போலீசார் அவரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மஜீத்தை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News