ஆன்மிகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா 29-ந் தேதி தொடங்குகிறது

Published On 2019-09-26 06:11 GMT   |   Update On 2019-09-26 06:11 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி கொலு அமைக்கப்பட்டு வருகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மீனாட்சி அம்மனுக்கு என்று தனியாக ஆடி முளைக்கொட்டு, புரட்டாசி நவராத்திரி விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம் போன்ற திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா வருகிற 29-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8-ந் தேதி வரை நடக்கிறது. அதையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் உற்சவர் மீனாட்சி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் காட்சி தருகிறார்.

திருவிழா நாட்களில் மாலை 6 மணி முதல் மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகி கல்ப பூஜை, சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் இரவு 8.30 மணி வரை நடைபெறும். அந்த பூஜை நேரத்தில் தேங்காய் உடைத்தல், அர்ச்சனைகள் செய்தல் போன்றவை மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப்பட மாட்டாது.

கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அலங்கார அம்மனுக்கு தான் தேங்காய் உடைப்பு மற்றும் அர்ச்சனைகள் செய்யப்படும். மேலும் திருவிழா நாட்களில் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

திருவிழாவையொட்டி சுவாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் கொலுச்சாவடிக்காக தனித்தனியாக அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. மொத்தம் 13 அரங்குகள் அமைக்கப்பட்டு, அதில் சுந்தரேசுவரரின் திருவிளையாடலை விளக்கும் கொலு பொம்மைகள் மற்றும் சிவன் மற்றும் சக்தியின் அம்சங்கள் குறித்த பொம்மைகள் வைக்கப்பட உள்ளன. கொலு அலங்கார பொம்மைகள் மற்றும் சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள் தொடர்பான பொம்மைகளை உபயமாக வழங்குபவர்கள் கோவில் உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.

அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் ஒவ்வொரு நாளும் உற்சவர் மீனாட்சி அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் காட்சி அளிப்பார். விழா ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News