ஆன்மிகம்
உடுமலையில் வேங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

உடுமலையில் வேங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2019-07-05 03:43 GMT   |   Update On 2019-07-05 03:43 GMT
உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை-தளி சாலையில் பள்ளபாளையத்தில் செங்குளம் கரை அருகே உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் பெருமாள், பத்மாவதி தாயார், ஆண்டாள், லட்சுமி ஹயக்ரீவர்,,லட்சுமி நரசிம்மர், தன்வந்திரி, சக்கரத்தாழ்வார், விஷ்வக்சேனர், கருடாழ்வார்,ஆஞ்சநேயர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன. இந்த கோவில் முழுவதும் கருங்கற்களால் ஆனது.

திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து இந்த கோவிலில் மகா கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 30-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தினசரி யாக சாலை பூஜைகள் நடந்தன. இதில் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் பல வண்ண விளக்குகளால் கோவில் வளாகம் ஜொலித்தன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு விஸ்வரூபம் தரிசனமும், பின்னர் சிறப்பு ஹோமங்களும் நடந்தன. இதைத்தொடர்ந்து மகாபூர்ணாகுதி, யாத்ரா தானம், தீர்த்தக்குடம் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தது.

உடுமலை திருப்பதி கோவிலின் கும்பாபிஷேக விழாவை கண்டு தரிசிப்பதற்காக உடுமலை, மடத்துக்குளம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். காலை 9 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேக யாக சாலை வழிபாடுகளை இஞ்சிமேடு பாலாஜி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார்.

யாக சாலையில் பூஜை செய்த தீர்த்த குடங்களில் இருந்து புனித நீரை பட்டாச்சாரியார்கள் கோவிலில் உள்ள மூலவர் மற்றும் பரிவார சன்னதிகளில் உள்ள விமான கோபுரங்களில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். அப்போது அங்கு திரண்டு இருந்த பக்தர்கள், ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர். உடனே ஸ்பிரிங்கலர் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

பின்னர் வேங்கடேசபெருமாள், பத்மாவதி தாயார், ஆண்டாள் ஆகியோர் புதிய பட்டாடையில், பல வண்ண மலர்கள் சூழ சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கும்பாபிஷேகம் முடிந்ததும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் ஸ்ரீமுஷ்ணம் வராகதேசிக மகாதேசிகன் சுவாமிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் 24-வது பட்டம் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள், செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ ஜீயர் சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். விழாவில் அகோபிலமடம் ஆஸ்தான வித்வான் ஏ.எம்.ராஜகோபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தாமல் ராமகிருஷ்ணன் சுவாமி கலந்து கொண்டு, “குறை ஒன்றுமில்லாத கோவிந்தா” என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.

மகா கும்பாபிஷேக விழா பக்தர்கள் கண்டு தரிசிப்பதற்காக ஆங்காங்கே அமைக்கப்பட்ட எல்.இ.டி. திரைகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. கும்பாபிஷேகத்துக்கு செல்லும் பிரதான பாதையில் 108 வாழை மரங்களுடன் பச்சை பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. உடுமலை பஸ் நிலையத்தில் இருந்து கோவிலுக்கு இலவச சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தது. கும்பாபிஷேகம் முடிந்ததும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி பாலாஜி ஸ்ரீசாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் வி.ராமகிருஷ்ணன், அறங்காவலர்கள் எம்.வேலுசாமி, எம்.அமர்நாத் ,ஜி.ரவீந்திரன் மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News