செய்திகள்
கோப்புப்படம்

உத்தரபிரதேசத்தில் இருந்து மத்திய மந்திரி உள்பட 10 பேர் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு

Published On 2020-11-02 23:54 GMT   |   Update On 2020-11-02 23:54 GMT
மத்திய மந்திரி ஹர்தீப்சிங் புரி உள்பட 10 பேர் உத்தரபிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
லக்னோ:

மத்திய மந்திரி ஹர்தீப்சிங் புரி உள்பட 10 பேர் உத்தரபிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதைப்போல உத்தரகாண்டில் இருந்தும் பா.ஜனதா சார்பில் ஒருவர் வெற்றி பெற்றார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் உத்தரபிரதேசத்தில் இருந்து 10 இடங்களும், உத்தரகாண்டில் இருந்து ஒரு இடமும் வருகிற 25-ந்தேதி காலியாகின்றன. எனவே இந்த 11 இடங்களுக்கும் வருகிற 9-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.

உத்தரபிரதேசத்தில் ஆளும் பா.ஜனதாவுக்கு சட்டசபையில் 304 இடங்கள் உள்ளன. அதன் அடிப்படையில் 8 இடங்களுக்கு பா.ஜனதா வேட்பாளர்களை அறிவித்தது. இதில் மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப் சிங் புரி முக்கியமானவர் ஆவார். மீதமுள்ள 2 இடங்களுக்கு சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தலா ஒரு வேட்பாளர்களை நிறுத்தின.

இதில் கடைசி நேர திருப்பமாக சமாஜ்வாடி ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்தார். இதனால் வருகிற 9-ந்தேதி தேர்தல் நடைபெறும் சூழல் உருவானது.

அதேநேரம் பகுஜன் சமாஜ் சார்பில் நிறுத்தப்பட்ட ராம்ஜி கவுதமுக்கு அந்த கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனால் மாநிலங்களவை தேர்தல் களம் பரபரப்பானது.

எனினும் வேட்புமனு பரிசீலனையில் சமாஜ்வாடி ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள 10 வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன. இதனால் அவர்கள் போட்டியின்றி தேர்வாகும் நிலை உருவாகி இருந்தது.

இதைத்தொடர்ந்து இந்த 10 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வானதாக நேற்று துணை தேர்தல் அதிகாரி முகமது முஷாகித் அறிவித்தார். அத்துடன் அவர்களுக்கான வெற்றி சான்றிதழ்களையும் வழங்கினார்.

இதன் மூலம் பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி, நீரஜ் சேகர், அருண் சிங், கீதா சாக்யா, ஹரித்வார் துபே, பிரிஜ்லால், பி.எல்.வர்மா, சீமா திவிவேதி ஆகியோரும், சமாஜ்வாடியின் ராம்கோபால் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சியின் ராம்ஜி கவுதமும் வெற்றி பெற்று உள்ளனர்.

இதைப்போல உத்தரகாண்டில் காலியாகும் ஓரிடத்துக்கு மாநிலத்தில் ஆளும் பா.ஜனதா சார்பில் கட்சியின் மூத்த தலைவர் நரேஷ் பன்சால் நிறுத்தப்பட்டு இருந்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அங்கு வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது.

இதைத்தொடர்ந்து நரேஷ் பன்சால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அவருக்கான வெற்றி சான்றிதழை சட்டசபை செயலாளர் முகேஷ் சிங்கால் வழங்கினார்.
Tags:    

Similar News