உள்ளூர் செய்திகள்
கஞ்சா

சென்னையில் பரபரப்பு- கஞ்சா விற்ற 2 போலீஸ்காரர்கள் சிக்கினர்

Published On 2022-04-17 10:00 GMT   |   Update On 2022-04-17 10:00 GMT
கஞ்சா விற்ற 2 போலீஸ்காரர்களின் பின்னணியில் கஞ்சா கடத்தல் கும்பல் யார் யார்? உள்ளனர் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:

தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் போலீசார் ஆபரேசன் 2.0 என்ற பெயரில் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

சென்னையில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பவர்கள் மீது கமி‌ஷனர் சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுத்து வருகிறார். கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்து வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் கஞ்சா விற்பதை தடுக்க எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கையில் 2 போலீஸ்காரர்கள் சிக்கியுள்ளனர். நேற்று புரசைவாக்கம் பகுதியில் கஞ்சா விற்ற திலீப்குமார் என்பவரை கஞ்சா விற்பதை தடுக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியபோது 2 போலீஸ்காரர்கள் தன்னிடம் கஞ்சாவை கொடுத்து விற்று தருமாறு கூறியதாக அவர் வாக்குமூலம் அளித்தார்.

அதில் ஒரு போலீஸ்காரர் ரெயில்வேயில் பணிபுரிந்து வருவது தெரியவந்தது. மற்றொரு போலீஸ்காரர் சென்னை மாநகரில் டி.ஜி.பி. அந்தஸ்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவரின் அலுவலகத்தில் பணிபுரிந்து வருவது தெரியவந்தது. விசாரணையில் போலீஸ்காரர்கள் இருவரும் கஞ்சா விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது.

ரெயில்வேயில் வேலை செய்யும் போலீஸ்காரர் ரெயிலில் கடத்தி வரும் கஞ்சாவை பறிமுதல் செய்து அதிகாரிகளுக்கு தெரியாமல் திலீப்குமாரிடம் கொடுத்து விற்று தருமாறு கூறியுள்ளார்.

கஞ்சா விற்ற 2 போலீஸ்காரர்களின் பின்னணியில் கஞ்சா கடத்தல் கும்பல் யார் யார்? உள்ளனர் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News