செய்திகள்
வானதி சீனிவாசன்

பா.ஜனதா கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவியாக பதவி ஏற்றார் வானதி சீனிவாசன்

Published On 2020-11-19 06:19 GMT   |   Update On 2020-11-19 06:19 GMT
பா.ஜனதா கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவியாக வக்கீல் வானதி சீனிவாசன் பதவி ஏற்பு விழா டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
சென்னை:

பா.ஜனதா கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவியாக வக்கீல் வானதி சீனிவாசன் பதவி ஏற்பு விழா டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

பதவி ஏற்பு விழாவையொட்டி டெல்லியில் உள்ள பாரதியார் சிலைக்கு மாலை அணிவிப்பதாக இருந்தது. ஆனால் மராட்டிய முன்னாள் கவர்னர் மறைவைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

காலையில் காளி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். அதன்பிறகு கட்சி அலுவலகத்துக்கு வந்த அவரை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். கட்சி அலுவலகத்தில் ஆண்டாள், வேலுநாச்சியார், அவ்வையார் ஆகிய மூவரது படங்களும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பிரசாதங்களை வழங்கினார்கள். தமிழில் பாசுரங்களை ஓதுவார்கள் உச்சரிக்க ஆண்டாளின் திருமாலை வானதி சீனிவாசனுக்கு அணிவிக்கப்பட்டது. பின்னர் அவரது இருக்கையில் அமர்ந்தார். முன்னாள் தலைவி விஜய் கட்டாரி முறைப்படி பதவியை ஒப்படைத்தார்.

பதவி ஏற்றுக்கொண்ட வானதி சீனிவாசன் கட்சி அலுவலகத்திற்கு வந்தவர்களுக்கு அவ்வையார், ஆண்டாள், வேலுநாச்சியார் பற்றிய சிறப்புகளை தமிழ் மற்றும் இந்தியில் அச்சிட்டு வழங்கினார்.

நேற்று 35 மாநில மகளிரணித் தலைவிகளுடனும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடி அவர்களின் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டார்.

பதவியேற்றதும் வானதி சீனிவாசன் கூறியதாவது:-

பா.ஜனதா கட்சி தமிழகத்திற்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கி உள்ளது. இதற்காக பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் பா.ஜனதா கட்சி தமிழ் பெண்ணால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு இந்த பதவியை வழங்கி இருக்கிறது. அந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் கடினமாக உழைப்பேன். கட்சியின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு அதிகரிக்கவும், அதிக அளவில் பெண்களை ஈரக்கவும், அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை பெற்றுத்தரவும் தேசம் முழுவதும் பாடுபடுவேன்.

குறிப்பாக தமிழின் சிறப்புகள் தமிழர்களின் பாரம்பரியம் தமிழகப்பெண்களின் ஆளுமைகள் பற்றி நாடு முழுவதும் எடுத்துச் செல்வேன். உலகின் தலைசிறந்த மொழியாகவும் கலாச்சாரமாகவும் விளங்கும் தமிழர் பெருமைகளை இந்தியா முழுவதும் எதிரொலிக்கச் செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பதவியேற்பு விழாவையொட்டி டெல்லி பா.ஜனதா அலுவலகத்தின் முன்பு பெரிய அளவிலான வானதி சீனிவாசன் படம் வைக்கப்பட்டிருந்தது. பா.ஜனதா அலுவலகத்தில் ஒரு தமிழ் பெண்ணின் படம் பெரிய அளவில் இடம் பெற்றது இதுவே முதல் முறை.

தேசிய தலைவியாக பொறுப்பேற்றுள்ள வானதிக்கு கட்சி அலுவலகத்தில் இரண்டு உதவியாளர் அலுவலகங்கள் உள்பட மூன்று அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் தனி வீடு, கார் வசதியும் கொடுக்கப்படுகிறது

விழாவில் தமிழக மகளிர் அணி தலைவி மீனாட்சி லலிதா மோகன் மற்றும் கருப்பு முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News